Skip to main content

கோரிக்கை வைத்த செங்கோட்டையன்; முதல்வர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

Published on 15/02/2025 | Edited on 15/02/2025

 

Sengottaiyan made a request Cm mk stalin made an important announcement

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு (DISHA) குழுவின் மாநில அளவிலான 4வது ஆய்வுக் கூட்டம் இன்று (15.02. 2025) நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, மா. சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர். பாலு, கே. சுப்பராயன், பி. மாணிக்கம் தாகூர், கே. நவாஸ் கனி, தொல். திருமாவளவன், துரை வைகோ, சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி. ராஜேந்திரன், நா. எழிலன், டி.கே.ஜி. நீலமேகம், எம். பூமிநாதன், ஜெ.எம்.எச். அசன் மௌலானா, கே.ஏ. செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும்  கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “தமிழ்நாட்டில் மத்திய அரசின் ஊரக வளர்ச்சி அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் 67 திட்டங்களைக் கண்காணிக்கவும் அதனைச் செயல்படுத்தவும் இந்த மாநில அளவிலான வளர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தை நடத்தி வருகிறோம். திட்டங்களுக்கு ஒதுக்கப்படக்கூடிய நிதியை முறையாகச் செலவிடுவது, திட்டச் செயல்பாடுகளைக் கண்காணிப்பது, மத்திய, மாநில, மாவட்ட மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கிடையே இணக்கமான நிலையை உருவாக்குவது, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் ஒன்றிய அரசினுடைய திட்டச் செயல்பாடுகளை ஆய்வு செய்ய வழிவகை செய்வது ஆகிய பணிகளை இதன் மூலமாகச் செய்து வருகிறோம்.

கடந்த கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. செங்கோட்டையன் கேட்டுக் கொண்டதின் படி, தேங்காய் விவசாயிகளுக்கு மிக விரைவாகப் பணப்பட்டுவாடா செய்திட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் பிரதம மந்திரியின் கிராம சாலைகள் (PMAYG) திட்டத்தின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு அலகு தொகையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தார். இது தொடர்பான கருத்துரு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சுப்புராமன் கோரிக்கையை ஏற்றுக் குழந்தைகளுக்குக் கட்டப்படும் அங்கன்வாடி கழிப்பறைகளுக்கான மதிப்பீடுத் தொகை 2025-26 நிதியாண்டிலிருந்து 30 ஆயிரம் ரூபாயிலிருந்து 75 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி செயல்படுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பேசினார். 

சார்ந்த செய்திகள்