கர்நாடக அரசில் திடீர் குழப்பத்தை ஏற்படுத்தும் பா.ஜ.க.,வை கண்டித்து, தமிழக காங்கிரஸ் சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் ஆர்ப்பாட்டம் 13ம் தேதி காலை நடந்தது. இதில் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி மட்டும் மிஸ்ஸிங்.
காரணம் இதுதான். பரமக்குடியில் நடக்கும் தமிழக முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சோ.பாலகிருஷ்ணனின் சிலை திறப்பு விழாவுக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி பங்கேற்க சென்றதால் ஆர்ப்பாட்டத்தில் தலைகாட்டவில்லை.
இதனால் தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத்தை தலைமை தாங்க வைத்து ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். இதில் மாவட்ட தலைவர்கள் வீரபாண்டியன். சிவராஜசேகரன், திரவியம் மற்றும் மாஜி மாவட்ட தலைவர் ராயபுரம் மனோ, சக்தி திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வம், ஊடகப்பிரிவு செயலாளர் கோபண்ணா என பலர் முன்னிலை வகித்தனர்.
அப்படியிருந்தும் கூட ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றது என்னமோ குறைவானவர்கள்தான். இதனால் எதிர்பார்த்த ‘டெம்போ’ எதுவும் கிடைக்கவில்லை என்பதால், திட்டமிட்ட நேரத்தை விட ஆர்ப்பாட்டத்தை சீக்கிரம் முடித்தார்கள்.
தேசிய கட்சியான காங்கிரஸ் தமிழகத்தில் முன்பை விட இப்போது வேகமாக தேய்ந்து வருவதை ஆர்ப்பாட்டத்தில் லைவ்வாக உணர்ந்த தொண்டர்கள் ‘என்னப்பா... கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பு ஆய்டுச்சின்னு சொல்வாங்க. ஆனா இப்போ சித்தெறும்பா ஆயிடுச்சேப்பா’ன்னு விரக்தியில் புலம்பியபடி கலைந்தனர்.
’போங்கப்பா.. நீங்களும் உங்க ஆர்ப்பாட்டமும்’ என பாதுகாப்புக்கு வந்த போலீசாரும் அங்கலாய்த்தபடி சென்றதுதான் அரசியல் ஹாட்!