தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், கன்னியாகுமரி மக்களவை தொகுதியின் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் ஒரே கட்டமாக ஏப்ரல் 6- ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் திறந்தவெளி காரில் நின்றவாறு வாக்குச் சேகரித்தார். அப்போது அவர் கூறியதாவது, "மக்கள் அனுமதியுடன் ஆட்சியைக் கைப்பற்றுவோம்; செய்யக் கூடிய வாக்குறுதிகளைத் தான் தந்துள்ளோம். 50 லட்சம் வேலை வாய்ப்பு சாத்தியமானது; அதை ஆயிரத்திற்கும், இரண்டாயிரத்திற்கும் விற்று விடாதீர்கள்" எனத் தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, அம்பத்தூரில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய கமல்ஹாசன், "தி.மு.க. தோன்றியது காலத்தின் கட்டாயம்; அதே தி.மு.க. அகற்றப்பட வேண்டியதும் காலத்தின் கட்டாயம். இதைக் கேட்டுவிட்டுச் செல்பவர்கள் வீட்டின் முன் எங்கள் வாக்கு விற்பனைக்கு அல்ல என எழுதிவைக்க வேண்டும். பெட்ரோல் விலை உயர்வுக்கு மாநில அரசையும், மன்மோகன் சிங்கையும் குறைகூறுகிறார்கள். கேஸ் சிலிண்டருக்கு ஆசைகாட்டி பழக்கப்படுத்தி விலையை உயர்த்திவிட்டனர். தமிழகம் வெற்றி நடைபோடுகிறது என்கிறார்கள், எங்கே வெற்றி நடைபோடுகிறது என நான் கேட்கிறேன்" என்றார்.