வரும் மே 19ஆம் தேதி தமிழகத்தில் அரவக்குறிச்சி,சூலூர்,திருப்பரங்குன்றம்,ஓட்டப்பிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.இந்த நிலையில் மதுரையில் அதிமுகவினர் தங்கியிருந்த குடியிருப்புகள் மற்றும் தனியார் பள்ளியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளார்கள் . மதுரை மாவட்டம் முழுவதும் தேர்தல் விதிமுறை நடைமுறையில் உள்ள நிலையில் வாக்காளர்களுக்கு பணம் பரிசுப் பொருள் வழங்குவது தடுப்பதற்காக மாவட்ட தேர்தல் அதிகாரி தலைமையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மாவட்டம் முழுவதும் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதிமுகவினர் வாக்களர்களுக்கு தலா 4 ஆயிரம் வீதம் பணவிநியோகம் செய்து வருவதாக புகார் எழுந்துள்ள நிலையில் மதுரை பென்மேனி அருகே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் அதிமுக முன்னாள் எம்.பி. சிட்லப்பாக்கம் ராஜேந்திரன் மற்றும் அதிமுகவினர் சிலர் தங்கியுள்ள அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் அருகில் உள்ள தனியார் பள்ளியில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் வந்துள்ளது. இதனையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பள்ளி மற்றும் அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை நடத்தினர்.
இதேபோல் மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட சாக்கிலிபட்டி கிராமத்தில் அதிமுக மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பாவிற்கு சொந்தமான தென்னந்தோப்பில் 40-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கட்டுகட்டாக பணத்துடன் பதுங்கியிருப்பதாக பறக்கும் படையினருக்கு புகார் வந்த நிலையில் போலீசார் மற்றும் பறக்கும் படையினர் அதிரடியாக சென்றபோது அதிமுகவினர் பணத்துடன் தப்பி ஓடி விட்டனர்.