![ர்](http://image.nakkheeran.in/cdn/farfuture/_QHd1YmbDe7p-uKtWXUgPDLHv8w7CXDD4hfRGwZSgIg/1544889564/sites/default/files/inline-images/raju_2.jpg)
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி நகரில் இன்றைய தினம் காலை 12 மணியளவில் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைப்பெற்றது. அக்கூட்டத்திற்கு மாவட்டச்செயலாளர் செல்லப்பாண்டியன் தலைமை வகித்தார். அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலை வகித்தார். கூட்டத்திற்கு சண்முகநாதன் ஆதரவாளர்கள், கட்சி தொண்டர்கள் மற்றும் அமைச்சர், மாவட்டச்செயலாளர் ஆதரவாளர்கள் என்று கோஷ்டிகளாக வந்திருந்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டத்தின் அதிமுகவின் 6 ஒன்றிய செயலாளர்கள் அமமுக அணியில் இணைந்தனர். அவர்களில் உடன்குடி ஒன்றிய அதிமுக ஒன்றிய செயலாளர் அம்மன் நாராயணனும் ஒருவர். இவர்களுக்கு பதிலாக உடன்குடி நகர ஒன்றிய பகுதிகளில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டார்கள். அப்படி நியமனம் செய்யப்பட்டதில் கட்சி தொண்டர்களுக்கு உடன்பாடு இல்லையாம்.
குறிப்பாக, உடன்குடி நகர செயலாளராக மகாராஜன் நியமிக்கப்பட்டதிலும் தொண்டர்களுக்கு எற்புடையதில்லை. இந்த நிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது. ஆரம்பத்தில் பேசிய நிர்வாகிகளுக்கு பின்னர் மாவட்ட கலை இலக்கிய துணைச் செயலாளர் பொன். ஸ்ரீராம் பேசிக்கொண்டிருந்தார். இவர், அமைச்சர் மற்றும் மா.செ. தரப்புக்கு எதிர்தரப்பான அதிருப்தி கோஷ்டியை சேர்ந்தவர். இவர் தன் பேச்சில், புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டதில் தொண்டர்கள் பலருக்கு ஏற்புடையவில்லை.
நம் அமைப்பிலேயே இங்குள்ள அதிமுகவில் சிலர் அமமுகவில் இருக்கிறார்கள். அதே போன்று வேறுசிலர் திமுகவின் தரப்பில் பலனடைகிறார்கள். இவ்வாறு ஆதரவாளர்கள் செயல்பட்டால் கட்சி எப்படி வளரும். நகர செயலாளர் ஜெயக்கண்ணனை மாற்ற வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தார் .
அப்போது மேடையில் அமைச்சருடன் சண்முகநாதனின் ஆதரவாளரான மகேந்திரன் பேசிக்கொண்டிருந்தார். அதைக்கண்ட அமைச்சரின் ஆதரவாளர்கள் அவரை மேடையில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கூச்சல் குழப்பம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு, ஏற்பட்டது. அடிதடியும் அரங்கேறியது. இதனால், பொன்.ஸ்ரீராம் தன் பேச்சை முடித்துக்கொண்டு அவரது ஆதரவாளர்களோடு வெளியேறினார். அவர் வெளியேறிய போதுதான் கூச்சல் குழப்பம் அடங்கியது. அதையடுத்து அமைச்சர் கடம்பூர் ராஜூ நிர்வாகிகளிடம், உங்கள் கோரிக்கைகளை தாருங்கள் பரிசீலிக்கிறோம் என்று சொல்லிவிட்டு கூட்டத்தைத் தொடர்ந்து நடத்தினார். இதனால் அதிமுகவினரிடையே உடன்குடி பகுதியில் பொறுப்பாளர் நியமன விசயத்தில் அதிருப்தி அதிகரித்த வண்ணம் இருக்கிறது.