Skip to main content

திமுக மாவட்டச் செயலாளர்கள் - சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் - நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் கூட்ட தீர்மானங்கள்                                                                  

Published on 24/12/2018 | Edited on 24/12/2018
d

 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  தலைமையில் இன்று (24-12-2018) காலை 10.00 மணி அளவில், சென்னை, கலைஞர் அரங்கில், தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் - சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் - நாடாளுமன்ற தொகுதிக் கழகப் பொறுப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது.

 

இக்கூட்டம் துவங்குதற்கு முன்பு, கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், “கஜா புயலால் உயிரிழந்தவர்கள் மற்றும் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தவர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்  தெரிவிக்கும் வகையில் இந்தக் கூட்டத்தில் அனைவரும் எழுந்து நின்று ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.” என அறிவித்தார்.

அதன்பின்னர், இக்கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் ஒரு நிமிடம் மௌனமாக எழுந்து நின்று உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்தனர்.

 

d

 

தீர்மானம் : 1


கஜா புயல் பாதிப்புக்கு உடனடியாக உரிய நிவாரணம் - விவசாயக் கடன், கல்விக்கடன் ரத்து செய்க!

கஜா புயல் காரணமாக,  காவிரி டெல்டா மாவட்டங்களான  தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி மற்றும் திண்டுக்கல் உள்ளிட்ட வேறு சில  மாவட்டங்களும் இதுவரை காணாத மிகக்கடுமையான பாதிப்புக்குள்ளாகி, 65 பேருக்கும் மேல் உயிரிழப்பு ஏற்பட்டு, விவசாயிகள் தங்களின் வேளாண்மையைப் பறிகொடுத்து, மீனவர்கள் தங்கள் படகுகளை எல்லாம் இழந்து  வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி பரிதவித்து நிற்கிறார்கள். மேலும், பாசனநீர் பிரச்சினை காரணமாக நெல் விவசாயத்திலிருந்து தென்னை விவசாயத்திற்கு மாறிய பல விவசாயிகள்,  தாங்கள் வளர்த்த அனைத்து தென்னை மரங்களும் புயலால்  முறிந்து விழுந்ததன் காரணமாக, தங்கள் எதிர்காலம் குறித்து மிகுந்த கவலையோடு இருக்கிறார்கள். அதுபோலவே, மா, பலா, முந்திரி உள்ளிட்ட மரங்களை வளர்த்த விவசாயிகளுக்கு மிகுந்த பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். வீடுகளை இழந்துள்ள மக்கள் இன்னும் சகஜ நிலைக்குத்  திரும்ப முடியாமல் சங்கடத்தில் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். நவம்பர் 15ஆம் தேதி நள்ளிரவில் வீசிய பலத்த புயல் பாதிப்புகளினால்  இழந்த வாழ்க்கையை மீட்டு எடுக்க,  நிவாரணங்கள் மற்றும் மீட்புப் பணிகளுக்கும் தேவையான “கஜா புயல்  பேரிடர் நிதி” இன்றுவரை மத்திய பா.ஜ.க. அரசு வழங்காமல் தாமதிக்கிறது. பேரிடர் நிதியை உரிய காலத்தில் கேட்டுப் பெற முடியாத அ.தி.மு.க அரசு, பாராளுமன்றத்தில் பா.ஜ.க.விற்கு ஆதரவாக அமளியில் ஈடுபடுகிறதே தவிர, கஜா புயல் நிவாரணப் பணிகள் மற்றும் சீரமைப்புப் பணிகளை முற்றிலும் கிடப்பில் போட்டு மக்களை தினந்தோறும் போராட்டக் களத்தில் தள்ளியிருக்கிறது. தமிழக மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன்  புறக்கணித்து வரும் மத்திய பா.ஜ.க. அரசுக்கும், நிவாரணம் மற்றும் மீட்புப்  பணிகளை முடக்கி வைத்துள்ள அ.தி.மு.க அரசுக்கும் இந்த மாவட்டச் செயலாளர்கள் - சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்றத் தொகுதிப்  பொறுப்பாளர்கள் கூட்டம் கடும் கண்டனத்தைத்  தெரிவித்துக் கொள்கிறது. 

இனியும் எவ்வித தாமதமும் இன்றி உடனடியாக கஜா பேரிடர் நிதியை மத்திய அரசு வழங்கிட வேண்டும் எனவும், புயல் பாதிப்புகளில் இருந்து மீண்டு மக்கள் சகஜ வாழ்க்கைக்குத்  திரும்பவும், காவிரி டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ள விவசாயிகளின் கடன், மாணவர்களின் கல்விக் கடன் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழுக்  கடன்களை தள்ளுபடி செய்யவும் - அவர்களுக்கான நிவாரண உதவிகளை விரைவில் வழங்கவும் அ.தி.மு.க அரசு  நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் இந்தக் கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

 

d

 

தீர்மானம் : 2

மேகதாது அணை தொடர்பாகத் தந்த அனுமதி, உடனே ரத்து செய்க!
 

உச்ச நீதிமன்றத்தின் காவிரி இறுதித் தீர்ப்பை மீறி,காவிரியாற்றின் குறுக்கே “மேகதாது அணை” கட்டும் திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு, மத்திய பா.ஜ.க. அரசு கர்நாடக மாநிலத்திற்கு அனுமதி கொடுத்திருப்பதற்கு இந்தக் கூட்டம் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

 

கர்நாடக அரசு இது போன்று அனுமதி கோரி மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய நேரத்திலேயே மத்திய அரசு அக்கடிதத்தை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு அனுப்பியிருக்க வேண்டுமே தவிர, மத்திய நீர்வள ஆணையத்திற்கு அனுப்பியிருக்கக் கூடாது. அவ்வாறு செய்யாமல் மத்திய அரசு தன்னிச்சையாக அனுமதி கொடுத்து விட்டு இன்றைக்கு “தமிழகத்தின் அனுமதியின்றி அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்” என்று முதலைக் கண்ணீர் வடிக்கிறது. மத்திய அரசு தற்போது அளித்துள்ள அனுமதி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புகளுக்கு எதிரானது என்பது தெரிந்திருந்தும், “ஆய்வு அறிக்கை தயார் செய்வதற்குத்தானே அனுமதி கொடுத்தோம்” என்று மத்திய பா.ஜ.க. அரசு மிகச் சாதாரணமாகக் கூறி வருவது கவலையளிக்கிறது. “காவிரி ஸ்கீம்” அரசிதழில் வெளியிடப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேலாகியும் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு நிரந்தர தலைவரை நியமிக்காமல்,  மத்திய நீர்வளத்துறை ஆணையத்தின் தலைவரையே “பொறுப்புத் தலைவராக” நியமித்து, கர்நாடக மாநிலத்திற்கு சாதகமாகவும், தமிழகத்திற்கு பாதகமாகவும் மத்திய பா.ஜ.க. அரசு நடந்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. கர்நாடக மாநிலத்தில் அடைய விரும்பும் தேர்தல் லாபத்திற்காக “மேகதாது அணை”கட்ட திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு அனுமதி கொடுத்திருக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் செயல்  தமிழக விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் போக்கு என்பதை விட, தமிழக உரிமைகளைப் பறிக்கும் அடாவடிச் செயல் என்று இந்த கூட்டம் கருதுகிறது. ஆகவே மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க அளித்த அனுமதியை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.

எக்காரணம் கொண்டும், எவ்வித அழுத்தத்திற்கும் அடிபணிந்து மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதித்து விடக்கூடாது என்றும், காவிரியில் தமிழக உரிமையை பாதுகாத்திடும் நோக்கில் இப்போது கொடுத்திருக்கும் அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று   உரிய அரசியல் அழுத்தத்தை மத்திய பா.ஜ.க. அரசுக்கு அளிக்க வேண்டும் என்றும் இக்கூட்டம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.