கரோனா வைரஸ் தொற்றால் அலறிய நாடுகள் அனைத்தும் இப்போது, அந்த வைரஸை தடுக்கும் வழிகளைத் தங்களது மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர். தற்போதைய சூழலில் மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட நாடு ஒன்றை கரோனா வைரஸ் தாக்கியிருக்கிறது என்றால் அது இந்தியா தான். ஆனால், மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், பலியானவர்களின் எண்ணிக்கையும் குறைவு.
இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் அதிகமாக உள்ளது. அதிலும், டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில் கரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருக்கிறது. ஏறத்தாழ ஒரு கோடி பேருக்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்த 4 மாநகரங்களைத் தொடர்ந்து கண்காணித்து வரும் மத்திய அரசு, அந்தந்த மாநில அரசுகளுக்கு அவ்வப்போது உரிய வழிகாட்டுதல்களைத் தெரிவித்து வருகிறது.
இந்த 4 நகரங்களிலும் குடிசைப் பகுதிகள் அதிகம். இங்கு வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால் சம்பந்தப்பட்ட மாநகராட்சிகள் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றன. தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் அறிவுறுத்தலின் பேரில் சென்னை மாநகராட்சி எல்லைக்குள் கரோனா வைரஸை கட்டுப்படுத்துவதை சவாலாக எடுத்துக் கொண்டு பணியாளர்கள் களத்தில் உள்ளனர்.
பெரும் மக்கள் தொகையும், அடர்த்தியான வசிப்பிட பகுதிகளையும் கொண்ட சென்னையில், குடிசைப் பகுதிகளைப் பாதுகாக்க மாநகராட்சி சிறப்புக் கவனம் செலுத்தி தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஏற்கனவே அறிவித்தபடி 26 லட்சம் குடிசை வாழ் மக்களுக்கு 52 லட்சம் முகக் கவசங்கள் வழங்கி வரும் மாநகராட்சி அதிகாரிகள், சென்னையின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான கண்ணகி நகரை கண்காணித்தனர்.
சென்னை சோழிங்கநல்லூர் மண்டலத்தில் உள்ள கண்ணகி நகரில் சுமார் 25 ஆயிரம் வீடுகள் உள்ளன. சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் வசிக்கும் இந்தப் பகுதியை மேம்படுத்த கடந்த ஒராண்டாக நடவடிக்கை எடுத்து வரும் மாநகராட்சி, அங்குள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது, கட்டடங்களில் நவீன ஒவியங்கள் வரைவது என அழகுபடுத்தி, அவர்களின் வாழ்வாதார சூழலை தரம் உயர்த்தியதில் மாநகராட்சியின் பங்கு பெரிய அளவில் உண்டு.
இந்தத் தரம் உயர்த்தும் பணிகளை அமைச்சர் எஸ்.பி வேலுமணி நேரில் சென்று பார்வையிட்டு, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். இதைத் தொடர்ந்து அங்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.இந்த அடிப்படை கட்டமைப்பு உறுதியாக இருப்பதால், மக்கள் ஒத்துழைப்பு இருப்பதால் கண்ணகி நகரில் கரோனா கிடையாது. இன்னும் சொல்லப்போனால் கரோனாவை கண்ணகி நகர் மக்கள் வென்றிருக்கிறார்கள்.
கடந்த ஏப்ரல் மாதம் இங்கு ஒரு கர்ப்பிணிக்கு கரோனா தொற்று இருந்தது கண்டு பிடிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், இங்கு வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து 198 ஆனது. இதையடுத்து மைக்ரோ திட்டத்தின் கீழ் செயல்பட்ட மாநகராட்சியின் பொது சுகாதாரத் துறை , முதல் கட்டமாக பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்கள் வசித்த பகுதியைச் சேர்ந்த 1,000 பேரை தனிமைப்படுத்தி, அவர்களை வீட்டை விட்டு வெளியே விடாமல் கண்காணித்ததுடன், அவர்களுக்கு 15 நாட்களுக்கு தேவையான பொருட்களையும், கப சுர குடிநீர் பாக்கெட்டுகளையும் வழங்கினர். அதே போல அனைவரும் முகக் கவசம் இல்லாமல் வீடுகளை விட்டு வெளியே வரக் கூடாது என்ற நிபந்தனை தற்போது வரை கடுமையாகப் பின்பற்றப்படுகிறது.
குடியிருப்புப் பகுதிகளில் தனிநபர் இடைவெளி கடைப்பிடித்தல், அடிக்கடி கை கழுவுதல் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை கண்ணகி நகர் மக்கள் முறையாகப் பின்பற்றினர். இதன் பலனாக கரோனா இல்லாத பகுதியாக கண்ணகி நகர் மாறியது. இதற்குக் காரணமான கண்ணகி நகர் மக்களுக்கும், மாநகராட்சி பணியாளர்களுக்கும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பாராட்டும் நன்றியும் தெரிவித்து, அவர்களை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தியுள்ளார்.
வீடுகள் தோறும், முகக்கவசங்கள், கை கழுவ சானிடைசர், சோப்புகள் உள்ளிட்டவை மாநகராட்சியால் தொடர்ந்து வழங்கப்படுகிறது. சென்னையில் கண்ணகி நகர் எப்படியோ அதே போல, மும்பையின் குடிசைப் பகுதி என அழைக்கப்படும் தாராவியும் கரோனா தொற்றிலிருந்து விடுபட்டுள்ளது. அங்கு ஆரம்பத்தில் பீதியை ஏற்படுத்திய கரோனா படிப்படியாகக் குறைந்ததற்கு மாநகராட்சியின் ஆக்கப்பூர்வமான நடவடிக்கை தான் காரணம்.
ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் வசிக்கும் சென்னை கண்ணகி நகரிலும், எட்டரை லட்சம் பேர் வசிக்கும் மும்பை தாராவியிலும், மாநகராட்சி மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகளுக்கு அங்கு வசிக்கும் மக்கள் அளித்த கூட்டு முயற்சியும் ஒத்துழைப்புமே கரோனா வைரஸை விரட்டியதற்கு முக்கிய அடிப்படை ஆகும். இதே ஒத்துழைப்பு நடவடிக்கை அனைத்துப் பகுதிகளிலும் தொடர்ந்தால், கரோனாவை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை கண்ணகி நகர், தாராவி மக்கள் விதைத்துள்ளனர்.