அதிமுக பொதுக்குழு செல்லாது என தனி நீதிபதி தீர்ப்பளித்திருந்தார். இந்த தீர்ப்பினை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். அந்த மேல் முறையீட்டு விசாரணையில் அதிமுக பொதுக்குழு செல்லும் என இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று தீர்ப்பளித்தது. தீர்ப்பினை வரவேற்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பு கொண்டாடி வரும் வேளையில் மேல்முறையீட்டிற்கு செல்லும் திட்டம் இருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தெரிவித்திருந்தது.
தனக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டதை அறிந்து சென்னை செல்ல ஆயத்தமான போது செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ், "சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து அதிமுக சார்பில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்" என கூறியிருந்தார்.
இந்நிலையில் இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து வரும் திங்களன்று உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
தீர்ப்பு குறித்து ட்விட்டரில் "உடனிருந்தே கொல்லும் வியாதிகளாக, நம் இயக்கத்தால் வாழ்வு பெற்ற ஒருசில சுயநல விஷமிகள், திமுக-விற்கு ஆதரவாக செயல்பட்டு வந்தனர். இவர்களின் கெடுமதிகளை முறியடிக்க, தூய்மையான மனதுடன் நீதி, நேர்மை, நாணயத்தை நம்பி, கழகத் தொண்டர்களின் முழு ஆதரவுடன் போராடி வருகிறோம். இன்றைய தினம் தர்மம், நீதி வென்றுள்ளது" என குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.