நாடு வளர்ச்சி பாதைக்கு செல்ல வேண்டும் என்று மகாத்மா காந்தியின் கனவு தற்போது வரை கேள்விக்குறியாகவே உள்ளதாகவும், அதற்கு காரணமான ஊழல் தான் இந்தியாவின் வளர்ச்சிக்கு தடையாக உள்ளதாக தமிழக அளுநர் பன்வாரிலால் புரோகித் குற்றம்சாட்டினார்.
கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் புத்தாக்கம் செய்யப்பட்டுள்ள மகாத்மா காந்தி மைய நூலகத்தையும், ஞான சமை என்னும் தியான மையத்தையும் திறந்து வைத்து பேசிய அவர், அனைவருக்கும் காலை வணக்கம், எப்படி இருக்கீங்க? நீங்கள் செளக்கியமா? இனிமையான மொழி தமிழ் எனவே தமிழை விரும்புகிறேன் என தனது உரையை தமிழ் மொழியில் துவக்கினார். பணம், புகழ், கற்றல், ஆகியவற்றைக் காட்டிலும் ஒழுக்கம் வாழ்வின் அடிப்படையாகும் என்று சுவாமி விவேகானந்தர் கூறியது போல ஒழுக்கத்தை அடிப்படியாக மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டவர், மாணவர்கள் தங்களிடம் பழகுபவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் பழக்கத்தை முதலில் வீட்டில் உள்ள அம்மாவிடம் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என வேண்டுக்கோள் விடுத்தார்.
தியானம் மூலம் அசுத்தங்களை மனதில் இருந்து அகற்றுவிட்டு தூய்மை அடைவதால் மாணவர்கள் அனைவரும் தியானம் செய்வதை நாள்தோறும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், சீனா,ஜப்பான் போன்ற நாடுகள் வளர்ச்சி அடைய அந்நாடுகளில் ஊழல் இல்லாததே காரணம் என சுட்டிக்காட்டியவர், தமிழகம் உயர்கல்வி துறையில் சிறந்து விளங்குவதாக நன்றி,வணக்கம் என தமிழில் கூறி தனது உரையை முடித்துக் கொண்டார்.
இதையடுத்து, கோவை சித்ரா அருகிலுள்ள தனியார் மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற ஆளுநர், மருத்துவர்கள் வெளிப்படையாக செயல்படவும், எந்தவித ஒளிவு மறைவுமின்றி மருத்துவமனை இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக கூறியவர், எவ்வளவு வேண்டுமானாலும் சிகிச்சைக்கு பணம் பெறலாம் என்றாலும், சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்க வேண்டும் என்று சாடியவர், அமைச்சர்கள் ஊழல் வாதிகளாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
மத்திய அரசின் காப்பீடு திட்டத்தால் தனியார் மருத்துவமனையில் தரமான சிகிச்சை அளிக்கப்படுவது அதிகரித்து வருவதாக கூறியவர், மக்களுக்கான மருத்துவத்துறையில் நவீன தொழில்நுட்பத்தை அனைத்து நிலைகளிலும் கொண்டு வர வேண்டும் என்று நன்றி, வணக்கம் என உரையை முடித்துக்கொண்டார். இந்த விழாவின் துவக்கத்தில் தேசிய கீதம் இசைத்த பிறகு தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டும், விழாவில் முடிவிலும் தேசிய கீதம் 2ஆம் முறையாக இசைக்கப்பட்டது.