பொதுத்துறை நிறுவன பணி நியமனங்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கான வாய்ப்பை உறுதி செய்திட வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக முதல்வர் பிரதமர் மோடிக்கு இன்று எழுதியுள்ள கடிதத்தில், 'நல்ல நிர்வாகத்திற்கு, மக்களுடன் இணக்கமாகப் பழகுதல், உள்ளூர் மொழி தெரிந்திருத்தல் முக்கியம். எனவே மத்திய அரசு பொதுத்துறை பணி நியமனங்களில் தமிழர்களுக்கான வாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். கல்வி, தொழில் நுட்பத்தில் ஒப்பீட்டளவில் பரந்த அறிவுத் திறமையுடன் கூடிய மனித வளங்களைத் தமிழ்நாடு கொண்டுள்ளது. ரயில்வே நிறுவனத்தில் பயிற்சி பெறுவோருக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டில் நேரடி நியமனங்களில் முன்னுரிமை தர வேண்டும்;
பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வான தகுதி வாய்ந்த நபர்களில் 4.5% அளவில் மட்டுமே தென் மண்டலத்தைச் சேர்ந்தவர்கள் தேர்வாகியுள்ளனர். அதிலும் ரயில்வே பணிக்குத் தேர்வானவர்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல, ரயில்வேயில் சமச்சீரற்ற பணி தேர்வு முறை தவிர்க்கப்பட வேண்டும். நாட்டில் அனைத்து பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் சம வாய்ப்புகள் வழங்குவது மட்டுமே சிறந்த சேவை. தமிழ்நாட்டில் மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்துத் தேர்வுகளையும் தமிழில் நடத்த வேண்டும்' என வலியுறுத்தப்பட்டுள்ளது.