பள்ளி கல்வித்துறை அமைச்சரான கே.ஏ.செங்கோட்டையன் தனது துறை சார்பாக ஒவ்வொரு நாளும் ஒரு அறிவிப்பை கொடுப்பது வழக்கம். அப்படித்தான் இன்றைய அறிவிப்பும்...
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நாகதேவன்பாளையம், நாதிபாளையம், வெள்ளாங்கோயில், மொடச்சூர் ஆகிய பகுதிகளில் மேல்நிலை தொட்டி அமைத்தல், கான்கிரீட் சாலைகள் அமைத்தல், கூட்டுறவு வங்கிக் கட்டிடம் மற்றும் கறவை மாடு கடன் வழங்குதல் உள்ளிட்ட திட்டப் பணிகளை அமைச்சர் செங்கோட்டையன் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, "மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்வித் திட்டத்திற்கு ஆய்வுசெய்ய தமிழக அரசின் சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்து வருகிற 21ஆம் தேதி முதல் 5 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளோம்.
இந்த விடுமுறை என்பது காலாண்டு, அரையாண்டுத் தேர்வு விடுமுறை போன்றதுதான். இதன் மூலமாக மாணவர்கள் தங்களுக்கான மன அழுத்தம் இன்றி மகிழ்ச்சியாக இருப்பதற்கு இது அமையும். இந்த விடுமுறையைக் கண்காணிப்பதற்கு ஒவ்வொரு வட்ட அளவிலும் கல்வித்துறை அலுவலர்கள் நியமித்துள்ளோம்.
அதேபோல், கரோனா வைரஸ் பாதிப்பு முழுமையாக குறைந்த பின்னா்தான் பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும். பகுதி நேர நூலகங்கள் முழுநேர நூலகங்களாக மாற்றம் செய்ய துறைரீதியாக ஆய்வுசெய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.
பள்ளிக்கூடம் போகாமல் ஏற்கனவே வீட்டில் தான் மாணவர்கள் உள்ளார்கள். லீவில் உள்ளவர்களுக்கே லீவு விட்ட அமைச்சரப்பா நம்ம அமைச்சர் என மாணவர்கள் பேனர் வைத்தாலும் வைப்பார்கள்.