Skip to main content

“கண்ணீர் அஞ்சலி போராட்டம் நடத்தப்படும்” - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

Published on 10/04/2025 | Edited on 10/04/2025

 

EPs announced A tearful tribute struggle will be held

நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்வோம் என்று பொய்கூறி ஆட்சியைப் பிடித்த திமுக அரசினால், தங்கள் இன்னுயிரை இழந்த மாணவ, மாணவிகளுக்கு அதிமுக சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காங்கிரஸ்- திமுக கூட்டணி மத்தியில் ஆட்சி செய்தபோது, குலாம்நபி ஆசாத் மத்திய சுகாதாரத் துறை அமைச்சராகவும், திமுகவின் காந்திசெல்வன் மத்திய இணை அமைச்சராகவும் பதவி வகித்தபோது, 21.12.2010இல் நீட் (NEET) நுழைவுத் தேர்வு கொண்டுவரப்பட்டது. 2011 முதல் 2016 வரை தமிழ்நாட்டில் ஜெயலலிதா சட்டப் போராட்டம் நடத்தி தமிழகத்திற்கு நீட் தேர்விற்கு தற்காலிகமாக விலக்கு பெற்றார்.

நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கிற்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரத்தின் மனைவியும், மூத்த வழக்கறிஞருமான நளினி சிதம்பரம் நீட் தேர்வு தொடர வேண்டும் என்று வாதாடியதுடன், 'எந்தச் சூழ்நிலையிலும், இனி யாராலும் இந்தியாவில் நீட் தேர்வை ஒழிக்க முடியாது' என்று பேட்டி அளித்தார். எனது தலைமையிலான ஜெயலலிதாவின் அரசு நீட் நுழைவுத் தேர்வு விலக்கு பற்றி அனைத்து சட்ட அம்சங்களையும் ஆய்வு செய்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தோம். உண்மை இவ்வாறிருக்க, 2021இல் நடைபெற்ற தமிழ் நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது தற்போதைய முதல்வர்  மு.க. ஸ்டாலின் மற்றும் தற்போதைய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இருவரும் தமிழக மக்களுக்கு நீட் நுழைவு தேர்வு குறித்து பொய் வாக்குறுதி அளித்து, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து என்றும், அதை ரத்து செய்வதற்கான இரகசியம் எங்களுக்குத் தெரியும் என்றும் மேடைதோறும் பொய் வாக்குறுதி அளித்து மாணவர்கள், பெற்றோர்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றனர்.

'நீட் நுழைவுத் தேர்வை மத்திய அரசுதான் ரத்து செய்ய முடியும், மாநில அரசு அல்ல, அந்த உரிமை மாநில அரசிற்கு இல்லை என்பதை 2021ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு முன்பே தெரியும் என்று மு.க. ஸ்டாலின் 10.01.2025 அன்று தமிழ் நாடு சட்டப் பேரவையில் ஆளுநர் உரை மீதான விவாதத்தில் ஒத்துக்கொண்டுள்ளார். நீட் நுழைவுத் தேர்விற்கு விலக்கு அளிக்க நடத்தப்பட்ட நாடகத்தின் முதற்கட்டமாக சட்டமன்றத்தில் இரண்டு முறை தீர்மானங்கள் நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தனர். இரண்டாம் கட்டமாக, திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் உள்ளிட்ட சுமார் ஒரு கோடி பேரிடம் தமிழகத்திற்கு நீட் வேண்டாம் என கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்புவோம் என்று வெற்று விளம்பரம் செய்து, சுமார் 50 லட்சம் பேர்களிடம் கையெழுத்துகள் பெற்றதாகக் கூறி அவற்றை சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையத்தில் நடந்த திமுக இளைஞர் அணி மாநாட்டில் காட்சிக்கு வைத்தனர்.

அதன்பின் அவை அம்மாநாட்டிற்கு வந்த அனைவரின் காலில் மிதிபட்டதை அனைத்து ஊடகங்களும், பத்திரிகைகளும் செய்திகளாக வெளியிட்டு, திமுகவின் பித்தலாட்டத்தை மக்களிடம் வெளிப்படுத்தினர். கச்சத் தீவை தாரை வார்த்தது; 50 ஆண்டுகள் முடிந்த பின்னர் காவிரி ஒப்பந்தத்தை புதுப்பிக்காமல் தாமதம் செய்தது, அதன் காரணமாக கர்நாடகம் காவிரியின் குறுக்கே அணைகளைக் கட்டியது: ஹைட்ரோ கார்பன் - மீத்தேன் ஆய்வுக்கு அனுமதி அளித்தது; 2009இல் இலங்கை தமிழர்களைக் காப்பாற்றுவது போல் 4 மணி நேர உண்ணாவிரத நாடகம் நடத்தியது; அறிவாலயத்தின் மாடியில் அமலாக்கத் துறை சோதனை, தரைத் தளத்தில் தொகுதிப் பங்கீடு என்று திமுகவின் காங்கிரஸ் எஜமான விசுவாசத்தை அடுக்கிக் கொண்டே போகலாம். நீட் நுழைவுத் தேர்வு ரத்து நாடகத்தின் மூன்றாம் கட்டமாக, நீட் நுழைவுத் தேர்விற்கு தீர்வு காண, சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று (09.04.2025) தலைமைச் செயலகத்தில் நடத்தப்படும் என்று  முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். முதல்வர் மு.க. ஸ்டாலினாலும், துணை முதல்வருமான. உதயநிதியாலும் நீட் நுழைவுத் தேர்வை ஒழிக்க முடியாது என்பதை பல காரணிகளுடன் தெரிவித்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நாங்கள் புறக்கணித்தோம்.

EPs announced A tearful tribute struggle will be held

உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வு விலக்கு தொடர்பாக ஏற்கெனவே ஜெயலலிதாவின் அரசு தொடர்ந்த வழக்கை  திமுக அரசு வாபஸ் பெற்றபின், புதிய வழக்கை தாக்கல் செய்து, இன்றுவரை அந்த வழக்கு நிலுவையில் இருக்கும் நிலையில், மீண்டும் புதிய வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நேற்று தீர்மானம் நிறைவேற்றி உள்ளது வேடிக்கையாக உள்ளது. தமிழக மாணவ, மாணவியரை, பெற்றோர்களை நீட் நுழைவுத் தேர்வு விஷயத்தில் ஏமாற்ற இன்னும் எத்தனை நாடகங்களை முதலமைச்சர் ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதியும் அரங்கேற்றப் போகிறார்களோ?. முதல்வர் மு.க. ஸ்டாலினும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினும், நீட் நுழைவுத் தேர்வை ஒரே கையெழுத்தில் தமிழ் நாட்டில் இருந்து ஒழித்துவிடுவோம் என்று கூறியதை தமிழக மக்கள் மறந்துவிடவில்லை. 2021இல் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இன்றுவரை நீட் தேர்வு அச்சத்தால் தமிழ் நாட்டில் 22 மாணவ, மாணவிகள் தங்களது இன்னுயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தும் விதமாக, அதிமுக மாணவர் அணியின் சார்பில் ஏப்ரல் 19ஆம் தேதி (19.4.2025 - சனிக் கிழமை) மாலை 6 மணி அளவில், அனைத்து வருவாய் மாவட்டத் தலைநகரங்களிலும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சார்ந்த செய்திகள்