சென்னை பனையூரில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் வீட்டின் முன்பு 100 அடி உயரம் கொண்ட பா.ஜ.க. கட்சியின் கொடிக் கம்பம் நிறுவப்பட இருந்தது. அனுமதியின்றி அக்கொடிக் கம்பம் வைக்கப்பட்டதாகப் புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து அரசு ஊழியர்கள் அந்தக் கொடிக்கம்பத்தை அகற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். கொடிக்கம்பத்தை அகற்றுவதற்காக ஜே.சி.பி. வாகனம் கொண்டுவரப்பட்டது. அப்பொழுது அங்கு கூடியிருந்த பா.ஜ.க.வினர் ஜே.சி.பி. வாகனத்தை சேதப்படுத்த முயன்றனர். இந்த சம்பவத்தில் ஏற்கனவே பா.ஜ.க.வினர் 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதனையடுத்து, அரசு ஊழியர்களைப் பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், தாக்கியதாகவும், பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாகவும் அண்ணாமலையின் நண்பர் அமர் பிரசாத் ரெட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட அவரை தாம்பரம் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்திய நிலையில் அவருக்கு நவ.3 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து, இந்த சம்பவத்தைக் கண்டித்து பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, “அதிகாரத் திமிரில் அராஜகம் செய்து கொண்டிருக்கும் திமுக, தமிழக பாஜகவின் ஒரு கொடிக்கம்பத்தை அகற்றிவிட்டதால் வெற்றி பெற்றதாக நினைத்துக் கொள்ள வேண்டாம். நவம்பர் 1 ஆம் தேதி தொடங்கி 100 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் தமிழகம் முழுவதும் 100 பாஜக கொடிக்கம்பங்கள் என 1000 கொடிக்கம்பங்கள் நடப்படும்” என்று அறிவித்தார். அதன்படி, நேற்று (01-11-23) தமிழகம் முழுவதும் 1400 இடங்களில் பா.ஜ.க கொடிக்கம்பங்கள் நடுவதற்கு பா.ஜ.க கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
அந்த வகையில், கோவை மாவட்டம் மசக்காளிப்பாளையத்தில் பா.ஜ.க கட்சியினர் அனுமதியின்றி கொடிக்கம்பம் நடப்போவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனால், அந்த பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இதனையடுத்து, நேற்று காலை கோவை மாவட்டத் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் பா.ஜ.க கட்சியினர் திரண்டு வந்து கொடிக்கம்பத்தை நட முயன்றனர். அப்போது அங்கு இருந்த போலீஸார், அனுமதி இல்லாமல் கொடிக் கம்பம் நடக்கூடாது என்று அவர்களிடம் தெரிவித்தனர். இதனால், போலீஸாருக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், அவர்கள் தமிழக அரசைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து, பாலாஜி உத்தம ராமசாமி, துணைத் தலைவர் கனக சபாபதி உள்பட 57 பேரை போலீஸார் கைது செய்தனர்.
அதேபோல், கடலூர் மாவட்டத்தில் பா.ஜ.க சிறுபான்மையினர் அணி தேசிய செயலாளர் இப்ராகிம் உள்பட 11 பேரையும், திண்டுக்கல் மாவட்டத்தில், மாவட்டத் தலைவர் தனபாலன் உள்பட 75 பேரையும் அனுமதியின்றி கொடிக்கம்பங்களை நட முயன்றதாக காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், பழனி என மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் அனுமதியின்றி கொடியேற்றியதாகவும், கொடிக்கம்பங்களை நட முயன்றதாகவும் ஏராளமான பா.ஜ.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ஒருவர் தனது சொந்த இடத்தில் கொடிக்கம்பத்தை வைப்பதை தடுப்பதற்கு யாருக்கும் அதிகாரம் கிடையாது. வீட்டில் கொடிக் கம்பத்தை ஏற்றியவர்களை வீட்டுக் காவலில் வைத்துள்ளார்கள். ஏற்கனவே இருந்த கொடிக் கம்பத்தை அகற்றி அருகில் புதிய கொடிக் கம்பத்தை வைத்தால் அதையும் தடுக்கிறார்கள். காவல்துறைக்கு நிறைய வேலை இருக்கிறது. ஆனால், காவல்துறையை ஏவல் துறையாக மாற்றி கொடிக் கம்பத்தை அகற்றுகின்றனர். தி.மு.க.வுக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே தான் போட்டி. இந்த விஷ பரீட்சைக்குள் காவல்துறை வரவேண்டாம்” என்று கூறினார்.