
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா கோவை அன்னூர் அருகே நேற்று(9.2.2025) நடைபெற்றது. இந்த விழாவில் விவசாயிகள், அதிமுக முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டனர். ஆனால் அதிமுகவின் மூத்த தலைவர்களின் ஒருவரான செங்கோட்டையன் கலந்துகொள்ளாதது கட்சியினர் மற்றும் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், “அத்திக்கடவு - அவிநாசி திட்டக்குழு நடத்திய பாராட்டு விழாவை நான் புறக்கணிக்கவில்லை; என்னை வளர்த்து ஆளாக்கிய எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற தலைவர்களின் படங்கள் வைக்கப்படாததால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. அத்திக்கடவு திட்டத்தை கொண்டுவர 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா ரூ.3.72 கோடி நிதியளித்தார். ஆனால் திட்டப் பணிகளை தொடங்க அடித்தளமாக இருந்த தலைவர்களின் படங்கள் மேடையில் இல்லை” எனத் தெரிவித்திருந்தார். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியின் கட்டுப்பாட்டில் இல்லை எனவும், முன்னாள் அமைச்சர்களின் பேச்சே அதற்கு எடுத்துக்காட்டு எனவும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார். சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, “ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வெற்றி திமுக ஆட்சிக்கான ஆதரவு அலையை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு கிடைத்த 34,000 வாக்குகள், இந்த முறை திமுகவுக்கு கிடைத்திருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளரான பிறகு 11 முறை தோல்வி அடைந்திருக்கிறார். இப்படி தொடர் தோல்வியை அடைந்திருக்கும் ஒரு அரசியல் தலைவர் அவராக தான் இருக்க முடியும். இதில் இருந்து அதிமுகவை வெற்றிப் பாதைக்கு அழைத்து செல்வதற்கு அவருக்கு எந்தவிதமான தகுதியும் இல்லை இன்று நிரூபணமாகியிருக்கிறது. அங்கு இருக்கக்கூடிய தலைவர்கள் எல்லாம் வெறுப்புடன் தான் உள்ளனர். அவருக்கு எந்த பயமும் கிடையாது என்பதெல்லாம் தவறு. கட்சி அவருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பதை அவருடைய முன்னாள் அமைச்சர்களாக இருந்தவர்களே பேசுகின்ற பேச்சுகள் உங்களுக்கு எடுத்துக் காட்டும். எனவே கட்சியைக் கட்டுப்பாட்டில் கொண்டு வர அவர் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்” என்று கூறினார்.