![cm Stalin completed projects worth Rs. 9,368 crore in paddy fields](http://image.nakkheeran.in/cdn/farfuture/mHJu0xsO3xEahk4JXP3_aTJpsv3n5lGjj8TYJfiIdrg/1738929213/sites/default/files/inline-images/54_66.jpg)
சுமார் ரூ.9,368 கோடி மதிப்பிலான திட்டங்களையும் பணிகளையும் நெல்லை மாவட்டத்திற்கு அர்ப்பணிக்கிற வகையிலும், கள ஆய்விற்காகவும் இரண்டு நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் நெல்லை வந்துள்ளார். இதற்காக பிப்-6 அன்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்த முதல்வர் அங்கு திரண்டிருந்த தொண்டர்களின் வரவேற்பிற்குப் பின்பு நெல்லைக்குப் புறப்பட்டார்.
நெல்லையின் பாளை எல்லையான கே.டி.சி. நகரிலிருந்து மக்களும், கட்சித் தொண்டர்களும் திரண்டிருந்து முதல்வர் ஸ்டாலினை வரவேற்றனர். தவிர தொகுதியின் பொறுப்பு அமைச்சர் கே.என். நேரு மற்றும் மா.செ.க்களான டி.பி.எம்.மைதீன்கான் மற்றும் ஆவுடையப்பன் தலைமையில் கட்சித் தொண்டர்கள் வழி நெடுகத் திரண்டிருந்தார்கள். முதல்வரை வரவேற்பதில் பெண்களிடையே ஆர்வம். வழிநெடுக வரவேற்றனர் பெண்கள். குறிப்பாக ஆர்வம் காரணமாக கே.டி.சி.நகரையடுத்த பகுதியில் முண்டியடித்து வந்த பெண்களில் சிலர் முதல்வர் ஸ்டாலின் கால்களில் விழ, அருகிலிருநு்து அமைச்சர் கே.என். நேருவோ, கால்களில் விழவேண்டாம என்று அவர்களிடம் கேட்டுக் கொண்டார். அங்கிருந்து கங்கை கொண்டானிலுள்ள சிப்காட் வருகிற பாதை நெடுக மக்களின் வரவேற்பில் தொய்வில்லை.
![cm Stalin completed projects worth Rs. 9,368 crore in paddy fields](http://image.nakkheeran.in/cdn/farfuture/caiq5tE0g3Xqyl-0LqlVtUfxEIG5MbVqQwHP6ytwsWo/1738929230/sites/default/files/inline-images/42_86.jpg)
அங்கே 4400 கோடியில் சுமார் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் பிரபல தொழில் முன்னணி நிறுவனமான டாட்டா குழுமத்தின் டாட்டா சோலார் பேனல் உற்பத்தித் தொழிற்சாலையைத் துவக்கி வைத்தார். அத்துடன் சிப்காட்டில் அமைந்துள்ள உணவு பூங்காவையும் திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின் அங்கு புதிதாக அமைக்கப்படுகிற விக்ரம் சோலார் பேனல் பசுமைத் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டினார்.
![cm Stalin completed projects worth Rs. 9,368 crore in paddy fields](http://image.nakkheeran.in/cdn/farfuture/RDV56Vg-jVN0C2kBe0CpdoxYnHuP4tp2J9gNZn4bDi4/1738929242/sites/default/files/inline-images/43_93.jpg)
அடுத்து பழையகால டைப்பிலிருந்த பாளையின் மார்க்கெட் பகுதியில் சீர்மிகு நர திட்டமான ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் சுமார் 40.62 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட 413 புதிய கடைகளைக் கொண்ட மகாத்மா காந்தி மார்க்கெட் வளாகத்தைத் திறந்து வைத்தது பாளையின் மையப் பகுதி புதுப்பொலிவு பெறுகிறது.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் மானூர் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த 22 ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடி நீர் திட்டமும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் பாளை-ரெட்டியார்பட்டி திட்டப் பகுதியில் 768 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட பல்வேறு முடிவுற்ற திடடப்பணிகளான ஜனரஞ்சமான திட்டப் பணிகளோடு சுமார் 78 கோடியில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் கட்டி முடிக்கப்பட்ட மருத்துவமனை புதிய விரிவாக்க அடுக்கு மாடி கட்டடமும் அடங்கும்.
பாளை அரசு மருத்துவமனை சிறப்பு விரிவாக்கம் செய்யப்பட்டதால் பாளை அரசு மருத்துவக் கல்லூரியின் தரம் மேலும் கூடுதலாகிற வாய்ப்பைப் பெறுகிறது. அடுத்து வரலாற்றுத் திட்டமான நீர் வளத்துறையின் சார்பில் முடிக்கப்பட்ட தாமிரபரணி, கருமேனியாறு மற்றும் நம்பியாறு நதி நீர் இணைப்பு வெள்ள நீர்கால்வாய் திட்டம்.
![cm Stalin completed projects worth Rs. 9,368 crore in paddy fields](http://image.nakkheeran.in/cdn/farfuture/E8UsA9N14f2UJSYO-l5KWqTCPTgOgYAlAeBP7Nhoie0/1738929290/sites/default/files/inline-images/55_93.jpg)
நீண்ட வரலாற்றைக் கொண்ட இத்திட்டத்தின் பின்னணி பல்வேறு திருப்பங்களையும் போராட்டங்களையும் கொண்டது. ஆண்டு தோறும் பொழியும் அக்டோபரின் வடகிழக்கு பருவ மழையின் தொடர் தாக்குதல் காரணமாக தென்மாவட்ட வற்றாத ஜீவ நதியான தாமிரபரணியில் அபரிமிதமான வெள்ளப்பெருக்கினை சீறிப்பாய வைத்துவிடும். அதன் விளைவு காலங் காலமாக அப்படி பொழிகிற மழையின் நதிவெள்ளம் சுமார் 41 டி.எம்.சிக்கும் குறைவில்லாமல் யாருக்கும் பயனில்லாமல் வீணாக நெல்லை - ஸ்ரீவைகுண்டம் வழியாக தூத்துக்குடி மாவட்டப் புன்னக்காயல் கடலில் சங்கமித்து வந்திருக்கிறது.இந்த விஷயம் ஜெயலலிதாவும் நன்கறிந்தது தான். ஆனால் அவரோ அதனை மக்கள் நலன்பக்கம் திருப்பவில்லை.
ஜெயலலிதா ஆட்சி மாறி கலைஞர் ஆட்சிக்கு வந்த போது சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட ராதாபுரம் தொகுதி எம்.எல்.ஏ.வான அப்பாவு உடனே இதனகை் கலைஞரின் கவனத்திற்குக் கொண்டு சென்றார். இப்படி வருடம் தோறும் வீணாகும் தண்ணீரைக் கால்வாய் மூலம் திருப்பி மழைமறைவுப் பிரதேசமான ராதாபுரம் வரை கொண்டு வந்து மணற்பாங்கான எம்.எல்.தேரியில் சேர்த்தால் அதன் நீரோட்டம் உயர்ந்து ராதாபுரம் தொகுதி தண்ணீர் வளம் பெரும். அதோடு வழியோரக் கிராமங்களும் பயனடையும் என்று எடுத்துச் சொல்ல, ஆழ்ந்த யோசனை செய்த கலைஞரும் தாமதமின்றி திட்டத்தை நிறைவேற்ற வழிகளைச் செய்திருக்கிறார். அவரின் திட்டப்படி தாமிரபரணி கருமேனியாறு மற்றும் நம்பியாறு இணைப்பு வெள்ள நீர் கால்வாய்த் திட்டம் உருவாகியிருக்கிறது.
அம்பை வழியாகப் பாய்கிற தாமிரபரணியை அடுத்துள்ள வெள்ளாங்குழிப் பகுதியிலிருந்து பாளை பொன்னாக்குடி, நாங்குனேரி ராதாபுரம் தொகுதிக் கிராமங்களைக் கடந்து திருச்செந்தூரின் தட்டார்மடம் பகுதியிலுள்ள பெரு மணல் தேரிக் காடான எம்.எல்.எல். தேரியில் கொண்டு வந்து சேர்க்கிற 75 கி.மீ. தொலைவு செல்கிற வெள்ள நீர் கால்வாய்த்திட்டத்திற்கு முதல்வர் கலைஞர் அப்போது 353 கோடி நிதியும் ஒதுக்கீடு செய்தார். அதோடு இத்திட்டப்பணிகளும் வேக மெடுத்தன.
![cm Stalin completed projects worth Rs. 9,368 crore in paddy fields](http://image.nakkheeran.in/cdn/farfuture/-LmxP6LrqMb2AgtpnB_kd2UD6SPxG2RvTHH84ORIHkM/1738929325/sites/default/files/inline-images/53_61.jpg)
பாதிகட்ட வேலைகள் முடிந்த நிலையில் கலைஞர் ஆட்சி மாறி ஜெயலலிதா ஆட்சியில் வந்து அமர்ந்தார். கலைஞர் கொண்டு வந்த திட்டம் என்ற ஒரே காரணத்தால் அவர் ஆட்சியில் திட்டம் முடக்கப்பட்டது. சளைக்காத அப்பாவு விவசாயிகளைத் திரட்டி பல கட்டப் போராட்டங்களை முன்னெடுத்தார். வருடங்கள் வீணாகக் கடந்தன. கால நிலை காரணமாக அ.தி.மு.க. ஆட்சிக்குப் பின் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முதல்வரானார். வந்த வேகத்தில் சபாநாயகர் அப்பாவு இத்திட்டத்தை அவரிடம் நினைவுபடுத்தவே உடனே அதனைச் செயல்படுத்திய முதல்வர் ஸ்டாலின் காலச் சூழல் காரணமாக எஸ்டிமேட் எகிற ரூ.933 கோடிகளை ஒதுக்கினார். நிறுத்தப்பட்ட வெள்ள நீர் கால்வாய்த் திட்டம் மறுஜென்மம் எடுத்தது. வெள்ள நீர் கால்வாய் வெட்டியமைக்கிற பணி தடையின்றித் தொடர்ந்து இறுதியாக ரூ.1060 கோடியில் இத்திட்டம் தற்போது முற்றுப் பெற்றிருக்கிறது. பாளை, நாங்குநேரி, ராதாபுரம், திருச்செந்தூர் தொகுதிகளின் மக்களின் குடி தண்ணீர் பஞ்சம் தீர்க்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலின் இதனை இப்போது மக்களுக்காக அர்ப்பணித்திருக்கிறார்.
வரலாற்றுத் திட்டமானதும் கலைஞரின் கனவுத் திட்டமுமான இந்த ஐனரஞ்சகமான வெள்ள நீர் கால்வாய்த் திட்டம் தி.மு.க.வை தென்மாவட்டத்தில் உயர்த்திப் பிடிக்கும் என்கிறார்கள் உ.பி.க்கள். மாலையில் பாளை மார்க்கெட் வளாகத்தில் கட்டப்பட்ட புதிய கடைகளை திறப்பதற்காக சர்க்யூட் ஹவுசிலிருந்து கிளம்பிய முதல்வர் வழியில் மக்கள் திரண்டிருப்பதைக் கண்டு 3 கி.மீ. தொலைவு நடந்தே சென்றிருக்கிறார். வழி இருபுறமும் நெடுக திரண்டிருந்த பெண்கள் முதல்வரை ஆரவாரமாக வரவேற்றிருக்கிறார்கள்.
![cm Stalin completed projects worth Rs. 9,368 crore in paddy fields](http://image.nakkheeran.in/cdn/farfuture/sDnt-I9Ts_FVs8F3NzJ0y54AFuAqvzCGQl7IiQfE6gw/1738929387/sites/default/files/inline-images/56_82.jpg)
அடுத்து அனுமதிக்கப்பட்ட மாவட்ட கட்சிப் பொறுப்பாளர்கள், வட்டக் கழக செ.க்கள் முதல் பகுதி செ.க்கள் வரையிலான நிர்வாகிகளின் கூட்டம் அலைமோதியது. பலரின் செயல்பாடுகளின் மீது அதிருப்தியாயிருந்த முதல்வர், மானூர் கிழக்கு ஒன்றியம், மானூர் தெற்கு ஒன்றியம், மேற்கு ஒன்றியம் ஆக மொத்த மானூர் பகுதி ஒன்றிய செயலாளர்கள் சரியா செயல்படவில்லை ஏகப்பட்ட புகார்கள் வருகின்றன. திருநெல்வேலி டவுண், தச்சை பகுதி செயலாளர்களின் செயல்பாடுகளும் சரியில்லை என்ற முதல்வர் அந்தச் செயலாளர்களின் பெயரையும் குறிப்பிட்டவர் இது எச்சரிக்கை தான் இது தொடர்ந்தால் அடுத்த தடவை நடவடிக்கை நிச்சயம் என்று எச்சரித்திருக்கிறார்.