2026 தேர்தலில் 200 இலக்கு என்பதை ஈரோடு கிழக்கு தேர்தல் வெற்றி தொடங்கி வைத்துள்ளது என திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அக்கட்சியின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “இந்த இடைத்தேர்தல் களத்தைச் சட்டமன்றத்தின் முதன்மை எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும், அது மறைமுகக் கூட்டணி வைத்திருக்கிற பா.ஜ.க.வும் திட்டமிட்டுப் புறக்கணித்துவிட்டு, உதிரிகளை முன்னிறுத்தித் தி.மு.க.வை எதிர்த்தன.
மக்களுக்குத் தேவையானவை குறித்து எதுவும் பேசாமல், மகத்தான தலைவர் தந்தை பெரியார் மீது அவதூறுகளை அள்ளி வீசிய கைக்கூலிகளுக்கு டெபாசிட் பறிபோகும் வகையில் ஈரோடு கிழக்குத் தொகுதி மக்கள் சரியான பாடம் புகட்டியிருக்கிறார்கள். இது என்றென்றும் பெரியார் மண் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள். 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன், ‘வெல்வோம் இருநூறு - படைப்போம் வரலாறு’ என்ற முழக்கத்தை உங்களில் ஒருவனான நான் முன்வைத்தேன்.
‘இருநூறு இலக்கு’ என்பதற்கான தொடக்க வெற்றியாக அமைந்திருக்கிறது இடைத்தேர்தல் கண்ட ஈரோடு கிழக்கு. மக்கள் நம் பக்கம் இருக்கிறார்கள். நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்கள். அந்த மக்களுக்குரிய திட்டங்களை நிறைவேற்றுவதற்குத் திராவிட மாடல் அரசு, மத்தியில் ஆளும் பா.ஜ.க. அரசுடன் அன்றாடம் போராடிக் கொண்டிருக்கிறது. சட்டத்தின் வழியே ஜனநாயகத்தை நிலைநாட்டுவதில் திமுக முன்னணியில் இருக்கும். அதற்கான நம்பிக்கையை ஈரோடு கிழக்குத் தொகுதியின் வெற்றி நமக்கு அளித்திருக்கிறது.
இந்த வெற்றிப்பயணம் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தொடர்ந்திடும் வகையில் திமுக அரசின் செயல்பாடுகள் அமைந்திடும். அவை சரியாக நிறைவேறுவதை உறுதி செய்யும் வகையில், மாவட்டந்தோறும் மேற்கொள்ளப்படும் ஆய்வுப் பணிகளின் அடுத்தகட்டமாக பிப்ரவரி 21, 22 ஆகிய நாட்களில் கடலூர் மாவட்டத்திற்குப் பயணிக்க இருக்கிறேன். எங்கு சென்றாலும் மக்களின் மலர்ந்த முகம் கண்டு மகிழ்கிறேன். கடலூரில் கடலெனத் திரண்டு வரவேற்கக் காத்திருக்கும் பொதுமக்கள், உடன்பிறப்புகளின் மலர்ந்த முகங்களை இப்போதே என் மனக்கண்களில் காண்கிறேன்”எனத் தெரிவித்துள்ளார்.