![Student fainted and lose their live at school; Chief Minister Relief Notice](http://image.nakkheeran.in/cdn/farfuture/9pehXbxol_SxVdvH70Vx2Pr0tuWwNFi4hCZCdwKUaGQ/1739274899/sites/default/files/inline-images/a2505.jpg)
தஞ்சாவூரில் பள்ளி மாணவி ஒருவர் திடீரென பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அடுத்துள்ள பள்ளத்தூர் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வந்தவர் கவிபாலா. பள்ளிக்குச் சென்ற நிலையில் திடீரென பள்ளியில் வாந்தி மயக்கம் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அங்கு இருந்த ஆசிரியர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதேபோல அந்த பள்ளியில் இரண்டு மாணவிகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாணவிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளி மாணவி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவியின் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, முதல்வர் நிவாரண நிதியில் இருந்து மாணவி கவி பாலாவின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.