உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில், கடந்த ஜனவரி 13ஆம் தேதி முதல் கும்பமேளா விழா நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 26ஆம் தேதி வரை நடைபெறும், இந்த விழாவில் இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வருகின்றனர். கும்பமேளாவில் பங்கேற்கும் பக்தர்கள் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் இடமான திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
அதே போல், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட பலரும் புனித நீராடி வருகின்றனர். தினசரி லட்சக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜ் நகரை நோக்கி வருவதால் அந்த இடம் முழுவதும் கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஸ்தம்பித்து வருகின்றது. அதே சமயம், விஐபிகளுக்கு மட்டுமே கும்பமேளாவில் முக்கியத்துவம் கொடுத்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இதற்கு எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், மகா கும்பமேளாவில் விஐபிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மறுப்பு தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் தீனதடாள் உபாத்யாயவின் 57வது நினைவு தின நிகழ்வு இன்று நடைபெற்றது. அந்த நிகழ்வில் பங்கேற்று பேசிய யோகி ஆதித்யநாத், “பிரயாக்ராஜில் 29 நாட்களில் 45 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர். இது வரலாற்று சிறப்புமிக்கது. இந்தியா மற்றும் சீனாவைத் தவிர, உலகில் வேறு எந்த நாட்டிலும் 45 கோடி மக்கள் தொகை இல்லை. மகா கும்பமேளாவில் விஐபி குளியலுடன் இணைத்து சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால், அது சாதி, மதம், மொழி மற்றும் பிராந்தியத்தின் தடைகளை அகற்றி பக்தர்கள் கைகோர்க்கும் நல்லிணக்கம் மற்றும் நம்பிக்கையின் சங்கமமாக இந்த கும்பமேளா நடைபெற்று வருகிறது.
எதிர்க்கட்சி தலைவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அரசாங்கத்திடமிருந்து வி.வி.ஐ.பி அந்தஸ்த்தை பெற்று, தங்களது எதிர்கால சந்ததியினருக்கு ஒரு பாதையை வகுக்க முயன்றனர். அவர்கள் எதிர்மறையான கருத்துகளை உருவாக்கி பொய்யான பிரச்சாரத்தை பரப்புகின்றனர். இதன் மூலம், அவர்கள் இந்தியாவிற்கும் சனாதன தர்மத்திற்கும் எதிராக நிற்கிறார்கள். இன்று, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜகவின் இரட்டை எஞ்சின் அரசாங்கம் பண்டிட் உபாத்யாயின் கனவுகளை நிறைவேற்றுகிறது. முன்பு வி.ஐ.பி வசதிகளை அனுபவித்தவர்கள்தான் இன்று சாமானிய மக்களுக்கு வழங்கப்படும் வசதிகளைக் கேள்விக்குள்ளாக்குகிறார்கள்” என்று கூறினார்.