புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று (16.07.2021) செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஏ.வி.எஸ். சுப்பிரமணியம், வைத்திலிங்கம் எம்.பி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்தச் செய்தியாளர் சந்திப்பில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மத்திய பாஜக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறினார்.
அவர் கூறும்போது, "கரோனா பேரிடர் காலத்தில் தொடரும் எரிபொருள் விலையேற்றமானது பொது மக்களைக் கடுமையாக பாதித்துள்ளது. எரிபொருள் விலையேற்றத்தை மத்திய அரசு உடனே திரும்பப் பெற வேண்டும். கடந்த 6 மாதங்களில் 66 முறை பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 13 மாதங்களில் பெட்ரோல் லிட்டருக்கு 25.72 ரூபாயும், டீசல் லிட்டருக்கு 23.93 ரூபாயும் விலை உயர்த்தப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு விலை இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. பாஜக ஆட்சியில் கடந்த 7 ஆண்டுகளில் கலால் வரி ரூபாய் 23ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனைத் தட்டிக்கேட்டால் மத்திய அரசு மாநிலங்களுக்கான வாட் வரியைக் குறைத்துக்கொள்ளுமாறு அறிவுரை கூறுகிறது. அதேநேரத்தில், மத்திய அரசு மாநிலங்களுக்குத் தர வேண்டிய ஜி.எஸ்.டி வரியை ஒழுங்காக தரவில்லை. பெட்ரோல், டீசல் மூலம் கிடைக்கும் ரூபாய் 25 லட்சம் கோடியில் ஊரக வேலை திட்டம், சுகாதாரம், கல்வி போன்றவற்றிற்கு கூடுதல் நிதி எதையும் ஒதுக்கவில்லை. எங்கே போகிறது அந்தப் பணம்? அதனை எடுத்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சலுகை அளிக்கின்றனர். இது வேறு ரூபத்தில் தேர்தல் நிதியாக மீண்டும் பாஜகவுக்கு வருகிறது. அதனால்தான் கொள்ளையடிப்பதாக கூறுகிறோம்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பணவீக்கம் தொடர்ந்து அதிகரித்துள்ளது. நரேந்திர மோடி குஜராத்தில் அடித்த கொள்ளை காரணமாக மத்திய அரசு தற்போது வேறுவழியில் அதற்குப் பணம் கொடுத்து சரி செய்கிறது.
அளவுக்கு அதிகமாக வரி விதித்ததால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் விலையைக் குறைக்காமல் மக்கள் மீது திணிக்கிறார்கள். கலால் வரி உயர்த்தப்பட்டதால்தான் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துவருகிறது. பாஜக அரசு எரிபொருள் விலையை ஏற்றிக்கொண்டுவருவது சாதாரண மக்கள் மீது தொடுக்கப்படும் வன்முறையாகும். இந்த விலை உயர்வால் நாட்டின் பணவீக்கம் அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசலின் வரியை உயர்த்திய மத்திய அரசு, ரூபாய் 24 லட்சம் கோடி வசூலித்துள்ளது.
தோல்வியடைந்த மத்திய பாஜக அரசால் தற்போதைய நாட்டின் பொருளாதாரம் சரிவடைந்துள்ளது. நாட்டில் கடந்த 7 ஆண்டுகளில் 23 கோடி பேர் வறுமை கோட்டுக்கு கீழ் சென்றுள்ளனர். மோடி அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை, நிர்வாக திறமையின்மை போன்றவைகளே இதற்கு காரணம். அத்தியாவசியப் பொருட்களான பால், சமையல் எண்ணெய், நெய், பருப்புகள் என அனைத்து பொருட்களின் விலைகளும் உயர்ந்துவிட்டன.
மத்திய பாஜக அரசு தடுப்பூசியில் கூட ஊழல் செய்கிறார்கள். தடுப்பூசி தயாரிப்பதிலும் ஊழல் நடக்கிறது. காங்கிரஸ் கட்சியின் அழுத்தம் காரணமாகவே மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படுகிறது. மோடி அரசின் ஊழலை வெளிக்கொண்டுவரும் பணியைக் காங்கிரஸ் அரசு தொடங்கியுள்ளது. மோடி அரசின் மக்கள் விரோத செயல்களைக் கண்டித்து காங்கிரஸ் சார்பில் அனைத்து மாநிலங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன" என்றார்.