![CM mk stalin said in Telugu Proverb They will not even give drinking water the](http://image.nakkheeran.in/cdn/farfuture/orOoqfLmXPKgR9J4Aw_lj3DcZxiuz3G9cigpPLfg8F0/1739077660/sites/default/files/inline-images/cm-mks-dmk-aavadi-art.jpg)
மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து திமுக சார்பில், திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் நேற்று (08.02.2025) மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுகத் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர், ‘தமிழ்நாட்டை வஞ்சிக்கும் மோடி அரசு’ என்ற தலைப்பில் உரையாற்றினார். அதில், “ஒன்றிய அரசு வெளியிட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் தமிழ்நாட்டின் பல்வேறு திட்டங்கள் பாராட்டப்பட்டிருக்கிறது. அனைத்துத் துறைகளிலும், மேல் நோக்கிய வளர்ச்சியைத் தமிழ்நாடு அடைந்து வருகிறது. இத்தகைய சூழலில் தமிழ்நாடு அரசுக்கு ஒத்துழைக்கும் ஒன்றிய அரசு மட்டும் இருந்திருந்தால் தமிழ்நாடு இன்னும் வேகமாக வளர்ந்திருக்க முடியும்.
தமிழ்நாட்டு மக்களான நீங்கள் முழுமையான வெற்றியை இந்தியா கூட்டணிக்குக் கொடுத்ததைப் போன்று, சில மாநிலங்களில் பெற முடியாததால், சிறிய வித்தியாசத்தில் மீண்டும் ஒன்றியத்தில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சியே அமைந்துவிட்டது. மூச்சுக்கு மூச்சு 400 சீட் வெற்றி பெறுவோம் என்று சொன்னாலும், இறுதியில் 240 இடங்கள்தான் கிடைத்தது. இறுதியில், கூட்டணிக் கட்சிகள் தயவோடு ஒரு மைனாரிட்டி அரசைத்தான் அமைக்க முடிந்தது. ஆனாலும், பா.ஜ.க. அரசு தன்னுடைய பாசிச, சர்வாதிகார, எதேச்சாதிகாரத் தன்மையை விட்டு இறங்காமல் பழையபடியே நடந்து கொள்வதைத்தான் பார்க்கிறோம். மதவாத அரசியலை நடத்தி, மக்களை ஒரு மயக்கத்தில் வைத்து, அரசியல்ரீதியாக லாபம் அடையலாம் என்று நினைக்கிறார்களே தவிர, மக்களுக்கு நல்லது செய்து, மாநிலங்களுக்குத் திட்டங்களை தந்து வளர வேண்டும் என்ற நினைப்பே பா.ஜ.க.விற்கு வராது. மதவாத அரசியல் மூலமாக, மக்களிடம் இருந்து ஓட்டு அறுவடை செய்து, காலத்தை ஓட்ட நினைக்கிறார்கள்.
அதனால்தான், ஒன்றிய அரசின் சார்பில் ஆண்டுதோறும் வெளியிடப்படும் நிதிநிலை அறிக்கை, வெற்று அறிக்கையாக இருக்கிறது. ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால், நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிற்கே எதுவும் இல்லை. திருக்குறளை மேற்கோள் காட்டினால் போதும், தமிழ்நாட்டை ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கிறாரா நிதி அமைச்சர்?. இப்போது புதிதாக தெலுங்கு கவிதையையும் மேற்கோள் காட்டுகிறார். 'நாடு என்றால் வெறும் மண் அல்ல; அதன் மக்கள்தான்' என்பது அப்பாராவ் எழுதிய அந்த கவிதையின் பொருள். அந்த மக்களுக்காக என்ன அறிவித்தார்கள்? எதுவும் இல்லை.
தெலுங்கில் ஒரு பழமொழி சொல்வார்கள்... 'பேரு பெத்த பேரு... தாக நீலு லேது...' என்று சொல்வார்கள். பெயர்தான் பெரிய பெயர் ஆனால் குடிக்கத் தண்ணீர் கூட கொடுக்க மாட்டார்கள் என்று அதற்கு அர்த்தம். அது போன்றுதான் பெயர் என்னவோ ஒன்றிய பட்ஜெட். இந்தியாவிற்கான பட்ஜெட், வளர்ச்சி பட்ஜெட். ஆனால், அது எதுவும் அதில் இருக்காது. அனைத்துப் பகுதிக்குமான வளர்ச்சியை உறுதி செய்திருப்பதாகப் பிரதமரும் நிதி அமைச்சரும் சொல்கிறார்கள். அனைத்துப் பகுதியின் பெயரும் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றிருக்கிறதா? என்று கொஞ்சமாவது மனச்சாட்சியுடன் பதில் சொல்லுங்கள். ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை என்பது அனைத்துத் தரப்பினரையும் ஏமாற்றும் வகையில் அமைந்திருக்கிறது” எனப் பேசினார்.