Skip to main content

பா.ஜ.க. தான் பிணம் தின்னும் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறது... கே.எஸ்.அழகிரி பதிலடி

Published on 03/01/2020 | Edited on 03/01/2020

 

பா.ஜ.க. தான் பிணம் தின்னும் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறது என்று முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பதில் அளித்துள்ளார்.
 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

சமீபத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகள் வரலாறு காணாத வெற்றி பெற்று வருவதை சகித்துக் கொள்ள முடியாத முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தமது இயல்பிற்கு மாறாக, தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளின் மீது சாபமிட்டு பேசியிருக்கிறார். 

 

congress-bjp



தி.மு.க.வும், காங்கிரசும் பிணம் தின்னும் அரசியல் செய்கின்றன என்று கூறியதோடு, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் அழிவுக்கு ஆளாவார்கள் என்றும் பேசியிருக்கிறார். விரக்தியின் விளம்பிலும், வீழ்ச்சிப் பள்ளத்திலும் இருந்து கொண்டு பேசுவதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
 

இந்திய நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்தும், பாகிஸ்தான் பிரிவினையிலிருந்தும் ஏற்பட்ட வரலாறு காணாத கலவரத்தை மதரீதியாக தூண்டி விட்டு பிணம் தின்னும் அரசியல் நடத்தியது யார் என்பது வரலாறு அறிந்தவர்களுக்குத் தெரியும். இதையொட்டி, வடமாநிலங்களில் வகுப்பு கலவரத்திற்கு வியூகம் வகுத்தவர்கள் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் என்பதையும் எவரும் மறுக்க முடியாது. 


 

450 ஆண்டுகால பாபர் மசூதியை இடித்துவிட்டு, ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று எல்.கே. அத்வானி தலைமையில் ரதயாத்திரை நடத்தி, நாடு முழுவதும் மதக் கலவரத்தை தூண்டியது யார் ? இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கு யார் பொறுப்பு ?  கோத்ரா ரயில் எரிப்பில் எந்த தொடர்பும் இல்லாத ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொல்லப்பட்ட போது தடுத்து நிறுத்தாத அன்றைய குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி தான் இன்றைக்கு பா.ஜ.க.வின் பிரதமர். இத்தகைய பிணம் தின்னும் அரசியலை நடத்திய பா.ஜ.க.வினர் இன்றைக்கு ஊருக்கு உபதேசம் செய்வதற்கு எந்த தகுதியும் இல்லை.


 

பல்வேறு மதம், ஜாதி, இன வேறுபாடுகளைக் கடந்து வேற்றுமையில் ஒற்றுமை கண்டு மதநல்லிணக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிற இ;நதிய மண்ணில், மதவெறியை தூண்டுகிற விஷவித்துக்களை தூவி, அரசியல் ஆதாயம் தேடுவது பா.ஜ.க.வின் தலையாய கொள்கையாகும்.
 

2014, 2019 மக்களவைத் தேர்தலில் ஒரு இஸ்லாமியருக்குக் கூட போட்டியிட வாய்ப்பு வழங்க மறுத்த பா.ஜ.க.,  முத்தலாக் சட்டத்தையோ, குடியுரிமை சட்டத் திருத்தத்தையோ கொண்டு வருவதற்கு என்ன உரிமை இருக்கிறது? இஸ்லாமியர்களை இந்தியாவில் இரண்டாந்தர குடிமக்களாக நடத்த வேண்டுமென்ற கோல்வால்கர் தத்துவத்தை நடைமுறைப்படுத்த முயல்கிற பா.ஜ.க. தான் பிணம் தின்னும் அரசியல் நடத்திக் கொண்டிருக்கின்றன. இதை இன்றைக்கு இந்திய மக்கள் ஓரணியில் திரண்டு முறியடித்து வருகிறார்கள். இதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருக்கிறது. இதை தாங்கிக் கொள்ள முடியாத பொன். ராதாகிருஷ்ணன் தி.மு.க. காங்கிரஸ் மீது சாபமிட்டுப் பேசியதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 
 


 

சார்ந்த செய்திகள்