பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்திய அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், பிரபலங்கள் உளவு பார்க்கப்பட்டதாக வெளியான தகவல் பூதாகரமாகி நிற்கிறது. இந்நிலையில், உளவு பார்க்கப்பட்டவர்கள் பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் உள்ளிட்டோரின் செல்ஃபோன் எண்களும் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ராகுல் காந்தி பயன்படுத்திவந்த இரண்டு செல்ஃபோன் எண்கள் அந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜேவாலா, இந்த சதிக்குப் பின்னால் இருப்பது உள்துறை அமைச்சர் அமித்ஷாதான் என்றும், அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இந்த விஷயத்தில் பிரதமர் மோடியின் பங்கு குறித்தும் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வலியுறுத்தியுள்ளார். சிதம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''இந்தியாவை இஸ்ரேல் உளவு பார்த்த விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும். ஒட்டுக்கேட்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். நீதிபதியை நியமித்து உச்ச நீதிமன்ற கண்காணிப்பில் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்'' என கூறினார்.