சென்னை திருவல்லிக்கேனி பகுதியில் வசித்து வரும் ரகு (45) என்பவர் தான் ஒரு மாந்திரீகம் செய்பவர் என்றும், தன்னால் ஒருவரை கோடீஸ்வரராக மாற்ற முடியும் என்றும் கூறி மலைக்கோவில் பகுதியை சேர்ந்த சதீஷ் பாபு என்பவரிடம் 3 ஆயிரம் பணத்தை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரகு மீது வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.
மேலும் அவரிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பாப்பல் விஷ்மயா என்ற பெயரில் யூடியூப் மூலம் இதுபோன்ற மாந்திரீக பூஜை செய்வது போன்ற வீடியோக்கள் மற்றும் அதற்கு ஆகும் செலவு என்று, பல வீடியோக்கள் வெளியிடப்பட்டதை காவல்துறையினர் கைப்பற்றி அவர் குறித்து பல விவரங்களை சேகரித்துள்ளனர். அதில் ஒரு அரசு அதிகாரி காரில் செல்லும் போதே விபத்தில் இறக்க மாந்திரீகம் செய்ய வேண்டும் என்று கூறியதாகவும், அதற்கு சுமார் 50 லட்சம் வரை செலவாகும் என்றும், ஒரு பூஜைக்கு குறைந்தபட்சம் 10 லட்சம் முதல் 20 லட்சம் வரை செலவாகும் என்றும், 397 குட்டி சாத்தான்களை கொண்டு கேரளா மாநில மாந்திரீகத்தை கொண்டு நினைத்ததை செய்து கொடுக்க முடியும் என்று அந்த வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் முரசொலி என்பவர் பெயரில் பூஜை செய்து அவர் மரணத்திற்கு தான் உத்தரவாதம் அளிப்பதாகவும், அதற்காக 100 நாட்டு கோழிகளை வாங்கி பூஜை செய்து அதை அறுத்து போடும் பதிவுகளும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் ஒரு பெண்ணின் தோள் மேல் கைப்போட்டுக் கொண்டு நிற்பது போன்ற புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. இவர் பலபேரை ஏமாற்றி, பல கோடிகளை சம்பாதித்திருப்பதும், மேலும் பலரை ஏமாற்றும் விதமாக இதுபோன்ற பதிவுகளை பதிவேற்றம் செய்து அதன் மூலம் ஏமாற்றி பணம் சம்பாதிக்கும் திட்டத்துடன் செயல்பட்டதும் தெரியவந்தது. மேலும் இவரால் ஏமாற்றப்பட்டவர்கள் இருந்தால் அது குறித்த புகார்களை கொடுக்க முன்வரலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.