தமிழ் நாட்டில் ஊரகப் பகுதிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 27, 30 என 2 தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற்றது.நடத்தப்பட்ட இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி இரண்டாம் தேதி மற்றும் மூன்றாம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகம் முழுவதும் 315 மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டது. தேர்தல் நடந்த 27 மாவட்டங்களில் மொத்தம் உள்ள 515 இடங்களில் 272 மாவட்ட கவுன்சிலர் பதவிகளை திமுக கைப்பற்றியுள்ளது. இந்த தேர்தலில் அதிமுக கூட்டணி 240 இடங்களை கைப்பற்றியுள்ளது. மேலும் ஒன்றிய கவுன்சிலரில் திமுக கூட்டணி 2356 இடங்களையும், அதிமுக கூட்டணி 2136 இடங்களையும் கைப்பற்றியுள்ளது.
இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி கடந்த தேர்தலில் பெற்ற வாக்கு சதவிகிதத்தை விட இந்த தேர்தலில் சற்று அதிகமான வாக்கு சதவிகிதம் பெற்றுள்ளனர். அதே போல் தமிழக உள்ளாட்சித் தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தின் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி ஒன்றை வென்றுள்ளதன் மூலம் தேர்தல் அரசியலில் முதல் வெற்றியை பெற்றுள்ளது நாம் தமிழர் கட்சி. அக்கட்சியை சேர்ந்த நெ. சுனில், ராஜாக்கமங்கலம் ஒன்றியத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
இந்நிலையில் இன்று வேலப்பஞ்சாவடியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், பிரசாந்த் கிஷோர் போன்று தேர்தல் ஆலோசனைக்காக நாம் தமிழர் கட்சி யாரையாவது நியமிக்குமா என கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதிலளித்த சீமான், நாங்கள் உலகத்தையே ஆள்வதற்கான அறிவு பெற்றிருக்கிறோம். இன்னொருவரின் மூளைக்கு எங்களால் வேலை செய்ய முடியாது. நாங்கள் அறிவின்மை கொண்டவர்கள் கிடையாது. மக்களுக்கு உள்ளத் தூய்மையுடன் சேவை செய்ய வந்திருக்கிறோம். அப்படிச் செய்திருந்தால் பிரசாந்த் கிஷோர் திமுகவுக்குத் தேவையில்லை. கட்சித் தலைமை மீது நம்பிக்கை இல்லாததால் இன்னொருவரைக் கூலியாக வேலைக்கு வைத்திருக்கின்றனர் என பதிலளித்துள்ளார்.