
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் விடாமுயற்சி. இப்படத்தில் கதாநாயகியாக த்ரிஷா மற்றும் வில்லன்களாக அர்ஜூன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லைகா தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் அஜித்தின் 62வது படமாக உருவான நிலையில் நேற்று(06.02.2025) திரையரங்குகளில் வெளியானது.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தையே பெற்று வருகிறது. இருப்பினும் வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட சில பிரபலங்கள் படக்குழுவினரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். இதனிடையே அஜித்தின் 62வது படத்தை இயக்க கமிட்டாகி பின்பு சில காரணங்ளால் வெளியேற்றப்பட்ட விக்னேஷ் சிவன் இப்படம் குறித்து தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “விடாமுயற்சி ஒரு நல்ல த்ரில்லர் படம். ஒரு புதிரைத் சரி செய்வது போல, முதல் பிரேமிலிருந்து கடைசி பிரேம் வரை உங்களை ரசிக்க வைக்கிறது. அஜித், தனது ஸ்க்ரீன் பிரசன்ஸாலும் மென்மையான நடிப்பாலும் ஒட்டு மொத்த படத்தையும் தனது தோள்களில் சுமந்து செல்கிறார். யதார்த்தமான ரிஸ்கான ஆக்ஷன் காட்சி முதல் எமோஷ்னலான கடைசி காட்சி வரை அவருடைய கதாப்பாத்திரத்தை நேர்த்தியாக பண்ணியிருக்கிறார். அவர் ஒவ்வொரு முறையும் நடக்கும் போதும் அதை அனிருத் இசையுடன் பார்க்கும் போது உண்மையாக நீங்கள் விசில் அடிப்பதை நிறுத்த முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளர். மேலும் மகிழ் திருமேனி, த்ரிஷா, ரெஜினா, ஆரவ், நீரவ் ஷா ஆகியோர்களின் பங்களிப்பை பாராட்டியுள்ளார்.
நேற்று படம் வெளியான நாளில் “சில நேரங்களில், விஷயங்கள் எப்படி நடக்கும் என்று கவலைப்படுவதை நிறுத்தும்போது மேஜிக் நடக்கும்” என விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்ட்ராகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.