நீட் தேர்வுக்கு எதிராக இன்று (ஆகஸ்ட் 20) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற உள்ளதாக திமுக சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த உண்ணாவிரதப் போராட்டமானது திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவர் அணி சார்பில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மதுரை மாவட்டம் நீங்கலாக தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இந்த உண்ணாவிரத ஆர்ப்பாட்டம் இன்று காலை 9 மணி முதல் தொடங்கி நடைபெற்றது.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்று வரும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் தொடங்கி வைத்தார். மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'தமிழ்நாடு முழுவதும் நடந்த உண்ணாவிரதப் போராட்டம் மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் மேலும் உறுதியை ஏற்படுத்தியிருக்கிறது. பாஜகவின் பாதம் தாங்கிகளான அடிமை அதிமுக கூட்டம் நீட் விலக்கு மசோதா திருப்பி அனுப்பப்பட்ட தகவலையே மறைத்தது. 2024-ல் அமைய உள்ள 'இந்தியா' கூட்டணி ஆட்சி மூலம் நீட் தேர்வை ரத்து செய்ய வைப்போம். நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் மேலும் உறுதியை ஏற்படுத்தியிருக்கிறது. நீர் தடுப்புச் சுவர் உடையும் காலம் வெகு தூரத்தில் இல்லை. நீட் தேர்வு இருக்காது என்ற வாக்குறுதியை அதிமுகவும் அதன் கூட்டணிக் கட்சியான பாஜகவும் தர முடியுமா? நீட் தேர்வு விலக்கப்பட வேண்டும் என்பது சமூக சமத்துவ கல்வியை விரும்பும் அனைவரது கோரிக்கை. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையானது அனைத்து மக்களின் கோரிக்கையாகவும் மாறியுள்ளது. ஒன்றிய பாஜக ஆட்சியின் ஊழல் வண்டவாளங்கள்தான் சிஏஜி அறிக்கையில் சிரிப்பாய் சிரிக்கிறது' என தெரிவித்துள்ளார்.