தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தங்கள் கட்சி வேட்பாளர்களையும், கூட்டணிக் கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து கட்சியின் தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். சில இடங்களில் ஆளும் கட்சி வேட்பாளர்களும் தலைவர்களும் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளுக்கு, எதிர்க்கட்சி வேட்பாளர்களும் தலைவர்களும் பதிலடி கொடுத்துவருகின்றனர்.
நேற்று (23.03.2021) பகல் பொழுதில் விருதநகர் மாவட்டம், சாத்தூர் தொகுதியில் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டட பணிகள் இன்னும் தொடங்கப்படாததை விமர்சித்து, “அதிமுகவும் பாஜகவும் சேர்ந்து மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி தொடங்கினாங்களே, அதைக் கையோடு எடுத்துட்டு வந்துட்டன்” என்று செங்கல் ஒன்றைக் காட்டி பேசினார்.
இந்நிலையில், நேற்று மாலை கோவை மாவட்டத்தில் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஒ.பி.எஸ். தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மலுமிச்சம்பட்டி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஓ.பி.எஸ்., “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மார்க் பண்ணிட்டிருக்காங்க. கூடிய விரைவில் அதன் கட்டட பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, இன்னும் ஓரிரு மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை இயங்கும் என்பதை இந்தக் கூட்டத்தின் மூலமாக தெரிவித்துக்கொள்கிறேன்” என பேசினார். இது அங்கிருந்த மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது.