
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அண்மையில் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்திருந்தார். இத்தகைய சூழலில் இரண்டு நாள் பயணமாக சென்னை வந்த மத்திய அமைச்சர் அமித்ஷா நேற்று (11.04.2025) காலை 35க்கும் மேற்பட்ட பா.ஜ.க. நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
பல்வேறு பரபரப்புக்கு மத்தியில் மத்திய அமைச்சர் அமித்ஷா, எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் நடைபெறவிருக்கும் 2026ஆம் ஆண்டும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க. மற்றும் அதன் அனைத்து கூட்டணிக் கட்சிகளும் இணைந்து தேசிய ஜனநாயகக் கூட்டணியாகப் போட்டியிடுவது என்று அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இந்தத் தேர்தலில் தேசிய அளவில் பிரதமர் மோடியின் தலைமையிலும், மாநில அளவில் அ.தி.மு.க. தலைவர் எடப்பாடி கே. பழனிசாமியின் தலைமையிலும் போட்டியிடும். கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க.விடம் இருந்து எந்த நிபந்தனைகளும் கோரிக்கைகளும் வைக்கப்படவில்லை. அ.தி.மு.க.வின் உள் விவகாரங்களில் நாங்கள் (பா.ஜ.க.) தலையிட மாட்டோம். இந்தக் கூட்டணி தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், அ.தி.மு.க.வுக்கும் சாதகமாக இருக்கும். 2026ஆம் ஆண்டு ஆட்சி அமைந்த பிறகு ஆட்சியில் பங்கீடு மற்றும் அமைச்சர்கள் பங்கீடு என இந்த இரண்டும் பின்னர் முடிவு செய்யப்படும்” என்றார்.
இந்த நிலையில் அதிமுக-பாஜக கூட்டணி குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், மதுரை நாடாளுமன்ற எம்.பி. சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள பதிவில், “ இறுதியில் எடப்பாடி வீழ்ந்தார்! வென்றவர் நீண்ட நேரம் பேசினார். வீழ்ந்தவருக்கு பேச்சுரிமை இல்லை. எனவே அமைதியாக இருந்தார். எடப்பாடி அவர்களைப் போல தமிழ்நாடு வீழாது. அதுவும் இவர்களிடம் வீழவே வீழாது. அனைவரின் பேச்சுரிமைக்காகவும், நம் மாநிலத்தின் உரிமைக்காகவும், இந்திய மாநிலங்களின் உரிமைக்காகவும் தமிழ்நாடு போராடும். வெல்லும்” என விமர்சித்துள்ளார்.