
கடலூர் மாவட்டத்தின் பாரம்பரியமான கடையென கருதப்படும் வள்ளி விலாஸ் நகைக்கடையில் 5.4 கிலோ தங்க நகைகள் போலி நகைகள் என இந்தியத் தர நிர்ணய கட்டுப்பாட்டு அதிகாரிகள் பறிமுதல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், புதுச்சேரி மாநிலம் உள்ளிட்ட பல பகுதிகளில் வள்ளி விலாஸ் நகைக்கடைகள் 10-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது. இந்த கடைகள் அனைத்தும் வள்ளி விலாஸ் என்ற பொது பெயரில் துணைபெயரை சேர்த்துக்கொண்டு வெவ்வேறு உரிமையாளர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. முதலில் தொடங்கப்பட்ட வள்ளி விலாஸ் கடை பலநூறு ஆண்டுகளை கடந்து பாரம்பரியமாக உள்ளதாக மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. இந்த பெயர் கொண்ட கடைகளில் நகைகள் எடுப்பதற்கே ஒரு தனி பெரும் கூட்டம் உள்ளது. இந்த கடையின் நகைகளை வேறு எங்கு கொடுத்தாலும் நம்பிக்கையுடன் வாங்கிக் கொள்வார்கள் என்று கூறும் நிலையில் பண்ருட்டியில் உள்ள வள்ளி விலாஸ் நகை கடையில் போலியாக ஹால்மார்க் முத்திரையிட்டு நகைகள் விற்பனை செய்யப்படுவதாக சென்னையில் உள்ள இந்திய தர கட்டுப்பாட்டு நிர்ணய அலுவலகத்திற்கு(பிஐஎஸ்) புகார் வந்துள்ளது.
அதன் அடிப்படையில் ஏப் 11-ந்தேதி இரவு இந்திய தர நிர்ணய இயக்குனர்கள் ஜீவானந்தம், முனி நாராயணா, ஸ்ரீஜித் மோகன், ஹரிஷ், சம்பத் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பண்ருட்டியில் உள்ள வள்ளி விலாஸ் நகை கடைக்கு சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனையில் ஹச்.யு. ஐ. டி. என்னும் 6 இலக்க எண் இல்லாமல் போலி ஹால்மார்க் முத்திரையிட்டு நகைகள் விற்பனை செய்வதை உறுதி செய்துள்ளனர். பின்னர் கடையில் இருந்த ரூ 4.80 கோடி மதிப்புள்ள 5.4 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் போலியாக ஹால்மார்க் நகைகளை விற்பனை செய்தது தொடர்பாக முறையாக சம்மன் அளிக்கப்பட்டு விசாரணை நடத்தி குற்றம் உறுதியானால் நகைக்கடை உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கடையின் உரிமையாளர் சரவணன் என்பவர் கடையில் தரமான தங்கத்தை விற்பனை செய்வதாகவும், போலி நகைகள் இல்லை என்றும், கடையில் விற்காமல் இருந்த பழைய ஹால்மார்க் முத்திரையிட்ட தங்கத்தை கைப்பற்றி அதனையும் ஒரு பெட்டியில் போட்டு சீல் வைத்து எங்களிடமே கொடுத்துள்ளனர். இதனை சோதனையின் போது நிரூபிப்போம் என்றார். தொலைப்பேசியில் மேலும் பேசவேண்டாம் என்று மறுத்து விட்டார்.
இதுகுறித்து பொதுமக்கள் தற்போது வெய்யிலின் சூடு ஏறுதோ இல்லையோ தங்கத்தின் விலை நாளுக்கு நாள் விலை ஏறி தற்போது ஒரு பவுன் செய்கூலி சேதாரம் என 80 ஆயிரத்தை கடந்துள்ளது. இது நடுதர ஏழைமக்களை பாதிப்படைய செய்கிறது. கடையின் நம்பிக்கையை கொண்டு திருமணம் உள்ளிட்ட விஷேசங்களுக்கு நகைகளை வாங்கி செல்கிறோம். இது போன்று போலி ஹால்மார்க் சீல் என்று கூறினால் நாங்க என்ன செய்வது. இதில் பாதிக்கபடுவது அப்பாவி ஏழைமக்கள் தான்.
இந்த ஒரு கடையை மட்டுமல்ல அனைத்து நகை கடைகளிலும் சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். நகைகளின் உண்மைத் தன்மையை வெளிகொண்டு வர ஹ.ச்.யு.ஐ.டி என்ற 6 இலக்க எண்ணை நகைகளில் பதிக்கப் படுவதை வரவேற்கிறோம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்