தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் மார்ச் 12- ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், தங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யும் பணிகளில் தமிழகத்தின் பிரதான கட்சிகளான அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள பா.ம.க.வுக்கு 23 சட்டமன்றத் தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 20 சட்டமன்றத் தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு, தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால், இரு கட்சிகளும் எந்தெந்த சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட இருக்கிறது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
இந்த நிலையில், சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி மற்றும் கே.பி.முனுசாமி எம்.பி., வைத்தியலிங்கம் எம்.பி. ஆகியோருடன், பா.ம.க. சார்பில் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி, வழக்கறிஞர் பாலு ஆகியோர் எந்தெந்த சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பா.ம.க.வின் ஏ.கே.மூர்த்தி, "பா.ம.க. போட்டியிடும் 23 தொகுதிகளின் பட்டியல் நாளை (07/03/2021) வெளியாகும்" என்றார்.
அ.தி.மு.க.வை போல் தி.மு.க.வும் தனது தலைமையிலான கூட்டணிக் கட்சிகளில் ஒரு சில கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு இறுதியாகி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், எந்தெந்த தொகுதிகளில் எந்தெந்த கட்சிகள் போட்டி என்பது குறித்து இதுவரை முடிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.