விழுப்புரம், செங்கல்பட்டில் கள்ளச்சாராயத்தால் இறந்தவர்கள் விவகாரத்தில் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்திலும் டாஸ்மாக்கில் மது விற்கப்பட்டது. அப்போதும் கள்ளச்சாராயம் இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. நல்வாய்ப்பாக யாரும் அப்போது இறக்கவில்லை. இதற்கு முன் முதலமைச்சர் வெளிநாடு போனதில் எவ்வளவு முதலீடு வந்துள்ளது. அந்நிய முதலீடு என்பதே ஆபத்தானது தானே. அன்று பிரிட்டனிடம் மட்டும் அடிமையாக இருந்தது. இன்று உலக நாடுகளிடம் அடிமையாக இருக்க என் நாடு துடிக்கிறது. இது என்ன சுதந்திரம், விடுதலை.
சிங்களப் படையால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர்களுக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டுள்ளது. உழவர்கள் 400க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்த சம்பவங்கள் உள்ளன. அவர்களுக்கு நிவாரணம் எவ்வளவு கொடுத்தீர்கள். தூத்துக்குடியில் விஏஓ அதிகாரி கொலை செய்யப்பட்டார். அவருக்கு ரூ.10 லட்சம். நேர்மையான அதிகாரிக்கு ரூ.10 லட்சம், விஷச்சாராயம் அருந்தி இறந்தவர்களுக்கும் ரூ.10 லட்சம். அதில் சாராயம் விற்றவர்களுக்கும் ரூ.50 ஆயிரம். குற்றவாளிகளுக்கும் குடும்பம் இருக்கிறது என சொல்கிறார்கள். சிறையில் இருக்கும் அனைவருக்கும் வீட்டுக்கு வீடு சென்று பணம் கொடுப்பீர்களா? தஞ்சாவூரில் இறந்தவர்கள் உடலில் சயனைடு இருந்ததாக சொல்கிறார்கள்.
அதில் ஒருவர் சொல்கிறார், டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுவை விட கள்ளச்சாராயம் விலை குறைவாக இருக்கிறது என்று. இப்போதெல்லாம் வாழ்ந்து என்ன பயன் நாம் சாவோம் என முடிவெடுத்தால் யாரும் பால்டாயிலோ எலி மருந்தோ குடிக்க வேண்டாம். விஷச்சாராயம் எங்காவது விற்கிறதா என பார்த்து அதைக் குடித்து இறந்தால் வீட்டிற்கு ரூ.10 லட்சம் வரும். சாவது என முடிவெடுத்துவிட்டால் சாராயம் குடித்து சாவுங்கள். இது என் அன்பான வேண்டுகோள்” எனக் கூறினார்.