தமிழகத்தில் 2021 சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு என்பது தொடங்கியுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற இருக்கிற நிலையில், 1.5 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 3,585 ஆண் வேட்பாளர்களும், 411 பெண் வேட்பாளர்களும், இரண்டு மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 3,998 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
பொதுமக்களும் காலை முதல் தங்களது வாக்குகளை செலுத்த தீவிரம் காட்டி வருகின்றனர். அதேபோல் அரசியல் கட்சி தலைவர்களும், நிர்வாகிகளும், திரைத்துறை நட்சத்திரங்களும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், வேதாரணியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, வேதாரணியம் நகராட்சி 21 வார்டு, நகராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள வாக்கு சாவடியில் ம.ஜ.க. பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான தமிமுன் அன்சாரி தனது வாக்கினை பதிவு செய்தார்.
அதன்பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்தவர், “ஜனநாயக பண்டிகையில் அனைவரும் வாக்களிப்பது கடமை. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவில் இந்தியாவே திரும்பி பார்க்கும் அரசியல் புரட்சி மே 2 அன்று வெளிப்படும்” என்றார்.