இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014ஆம் ஆண்டு முதன்முதலாக பிரதமராக பதவியேற்றார். பின்னர் 2019 தேர்தலில் மீண்டும் வென்று இரண்டாவது முறையாக பிரதமரானார். இதன்மூலம் தொடர்ந்து 7வது வருடமாக மோடி, இந்தியாவின் பிரதமர் பதவியை வகித்துவருகிறார்.
மோடி, பிரதமர் பதவிக்கு வந்து ஏழு ஆண்டுகள் ஆகியுள்ளதை பாஜக தொண்டர்கள் கொண்டாடிவருகின்றனர். அதேநேரத்தில் காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடி தலைமையான ஆட்சியைக் கடுமையாக விமர்சித்துவருகின்றன.
இந்தநிலையில், திரிணாமூல் காங்கிரஸைச் சேர்ந்த எம்.பி.யான டெரெக் ஓ பிரையன், பிரதமர் மோடியை ஜேம்ஸ் பாண்ட் போல் சித்தரிக்கும் படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். கோட் - சூட்டுடன் ஜேம்ஸ் பாண்ட் போல பிரதமர் மோடி சித்தரிக்கப்பட்டிருக்கும் அந்தப் படத்தில் ‘they call me 007’ என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.
மேலும் அந்தப் படத்தில், 007 என்பது 0 முன்னேற்றம், 0 பொருளாதார வளர்ச்சி, 7 ஆண்டுகளாக இருக்கும் தவறான நிதி மேலாண்மை ஆகியவற்றைக் குறிப்பிடுவதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.