
சென்னை மற்றும் கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த மார்ச் மாதம் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் மூலம் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது. அமலாக்கத்துறை இந்த விசாரணையை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணையில் இருந்த நிலையில் நீதிபதிகள் இருவரும் இந்த வழக்கில் இருந்து திடீரென விலகினர். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு எஸ்.எம். சுப்பிரமணியன் மற்றும் ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் தற்போது விசாரணையில் இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த வழக்கு நேற்று (15.04.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், தமிழகக் காவல்துறை, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று (16.04.2025) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், “டாஸ்மாக் முறைகேடு மூலம் ரூ.1000 கோடிக்கும் மேல் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான ஆவணங்களும் தலைமை அலுவலகத்தில் உள்ளது. குறிப்பிட்ட முறையில் தான் விசாரணை நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட முடியாது” எனத் தெரிவித்துள்ளது.