
சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சார் ஆட்சியரின் அதிரடி நடவடிக்கையால் கழிவறை வசதி ஏற்படுத்தப்பட்டு அதன் அருகே இருந்த காத்திருப்புக்கூடம் கல்வி அறிவை வளர்க்கும் புத்தக வாசிப்பு கூடமாக மாறியுள்ளது.
சிதம்பரம் சார் ஆட்சியர் அலுவலகம் உட்கோட்ட தலைமை அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு சிதம்பரம், புவனகிரி, காட்டுமன்னார்கோயில், ஸ்ரீமுஷ்ணம் வட்டப் பகுதிகளிலிருந்து தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்களின் சொந்தம் மற்றும் பொது வேலையாக வந்து செல்கிறார்கள். அதே நேரத்தில் திங்கள் கிழமை மனு நீதி நாள் என்பதால் 200-க்கும் மேற்பட்டவர்கள் மனு அளிக்க வருகிறார்கள். இவர்களுக்கு அடிப்படை தேவையான கழிவறை வசதி இல்லை. கழிவறை இருந்தும் தண்ணீர் வசதி இல்லாததால் பயன்படுத்த முடியாத நிலையில் மிகவும் அசுத்தமாக இருந்தது.
இதுகுறித்து கடந்த மார்ச் 6-ந் தேதி நக்கீரன் இணையத்தில் கழிவறை மோசமாக இருந்ததை படத்துடன் சிதம்பரம் சார் ஆட்சியர் கிஷன்குமாரிடம் விளக்கம் கேட்டு பொதுமக்களின் கழிவறை சரிசெய்யப்படுமா? சார் ஆட்சியரின் உத்தரவாதம் என்ற தலைப்பில் பதிவு செய்யப்பட்டது. அப்போது அவர் சிதம்பரம் அலுவலகத்தில் பணிக்கு சேர்ந்து ஒரு வாரமே ஆகிறது என்றும் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதன் அருகே உள்ள காத்திருப்பு கூடத்தை புத்தக அலமாரிகள் வைத்து பயனுள்ள வகையில் அமைக்கப்படும் எனக் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து பொதுமக்களின் அடிப்படை தேவையை கருத்தில் கொண்டு கழிவறையில் தண்ணீர் வசதியுடன் 24 மணி நேரமும் கழிவறையை சுத்தமாக வைக்க ஏற்பாடுகளை செய்துள்ளார். தற்போது கழிவறை சுத்தமான முறையில் தண்ணீர் வசதியுடன் உள்ளதால் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதே நேரத்தில் கழிவறைக்கு அருகே பொதுமக்களின் காத்திருப்பு கூடத்திற்கு வண்ணம் தீட்டி புத்தகம் வைக்கும் அலமாரிகள் அமைக்கப்பட்டு அதில் அறிவு சார்ந்த கதைகள், தமிழ் அறிஞர்கள் எழுதிய புத்தகங்கள், பொது அறிவு புத்தகங்கள் வைத்துள்ளனர். மேலும் காத்திருப்பு கூடத்தை சுற்றி சின்னசின்ன ஜாடிகளில் பசுமை மற்றும் அழகு செடிகள், மூலிகைச் செடிகளை வைத்து பசுமையை பார்த்து மகிழும் விதமாக பசுமை கூடமாக மாற்றியுள்ளார்.
எனவே சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு பல்வேறு குறைகளை தீர்த்துக்கொள்ள மன கவலையுடன் வரும் பொது மக்கள் காத்திருப்பு கூடத்தில் அமர்ந்து பசுமைகளை பார்த்து மனமகிழ்ந்து அங்குள்ள புத்தகங்களை வாசித்துவிட்டு இளைப்பாறி செல்கிறார்கள். இது அனைத்து தரப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனை ஏற்பாடு செய்த சார் ஆட்சியர் உள்ளிட்ட அலுவலர்களுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்து வருகின்றனர்.