
குஜராத் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இந்நிலையில் குஜராத் மாநிலம் போர்பந்தர் அருகே போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது போர்பந்தர் துறைமுகம் அருகே 6 பேருடன் படகு ஒன்று வந்து கொண்டிருந்தது. இதனைக் கண்ட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் படகில் வந்தவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது படகில் வந்தவர்கள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
அதனைத் தொடர்ந்து படகில் சோதனை மேற்கொண்டபோது போதைப் பொருள் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 480 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவம் தொடர்பாக 6 பாகிஸ்தானியர்களை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மூலம் குஜராத்தில் கடந்த 30 நாட்களில் இரண்டாவது முறையாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் பிடிபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.