
நாயகன் படத்திற்கு பிறகு மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணி அமைத்துள்ள படம் ‘தக் லைஃப்’. இப்படத்தில் சிம்பு, த்ரிஷா, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி, அபிராமி, நாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராஜ்கமல் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை கமலுடன் இணைந்து ரெட் ஜெயண்ட் நிறுவனம் வழங்குகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு செர்பியா, அயர்லாந்து, ராஜஸ்தான், டெல்லி, கோவா, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. படத்தின் டப்பிங் பணிகளை கமல்ஹாசன், சிம்பு ஆகியோர் கடந்த ஆண்டே தொடங்கியிருந்தனர். இதுவரை இப்படத்தில் இருந்து டைட்டில் அறிவிப்பு வீடியோ மற்றும் ரிலீஸ் தேதி டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் ‘தக் லைஃப்’ படத்தின் முதல் பாடலான ‘ஜிங்குச்சா..’(Jinguchaa) என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலுக்கு கமல்ஹாசன் வரிகள் எழுத, வைஷாலி சமந்த், சக்திஸ்ரீ கோபாலன், ஆதித்யா ஆர்.கே ஆகிய மூவரும் பாடியுள்ளனர். இந்த பாடலில் ஒரு திருமணத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை நடக்கும் சடங்குகளை ஒன்றன்பின் ஒன்றாக குறிப்பிட்டு உறவுகளை ஒன்றினைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. பின்னணி குரலும், பாடல் வடிவமைக்கப்பட்ட விதமும் பலரையும் கவர்ந்துள்ளது.
திருமண வீடுகளில் தற்போது ஒலித்துக்கொண்டிருக்கும், ‘பாக்கு வெத்தல மாத்தி பையன் வந்தாச்சு..’, மால டும் டும் மத்தள டும் டும்..’ பாடல்களில் வரிசையில் இனி வரும் காலங்களில் ‘ஜிங்குச்சா..’ பாடலும் ஒலிக்கும் என்பதில் சந்தேகமில்லை....