
தமிழக பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியில் இருக்கன்குடி, நத்தத்துப்பட்டி, குண்டலகுத்தூர் ஆகிய பகுதிகளில் கட்டி முடிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை திறந்து வைப்பதற்காக வந்திருந்தார். அண்மையில் கட்டி முடிக்கப்பட்ட அங்கன்வாடி மையம் மற்றும் நீர்த்தேக்க தொட்டியைத் திறந்து வைக்க தயாரானார்.
அப்போது நத்தத்துப்பட்டி கிராமத்தின் உள்ளூர் கட்சி நிர்வாகி ஒருவர் 'நான் செல்லுகின்ற பாதையில் சென்று முதலில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை அமைச்சர் திறந்து வைக்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார். அதேபோல் மற்றொரு உள்ளூர் நிர்வாகி ஒருவர் 'நான் செல்லும் பாதையில் சென்று அங்கன்வாடி மையக் கட்டிடத்தை முதலில் திறந்து வைக்க வேண்டும். அதன் பிறகு தான் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை திறந்து வைக்க வேண்டும்' என கோரிக்கை வைத்தார்.
இப்படியாக இரண்டு தரப்பினரும் கோரிக்கை வைத்த நிலையில் ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தை முற்றி அமைச்சர் முன்னேயே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் முதலில் எங்கு செல்வது என தெரியாமல் காரிலேயே சிறிது நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி முதலில் அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர், அதன் பிறகு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை திறந்து வைத்தார்.
அதேபோல் இருக்கன்குடி பகுதியில் அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைக்க கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் சென்றபோது உள்ளூர் நிர்வாகிகள் அமைச்சர் வருவதை தங்களிடம் சொல்லவில்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.