
ரம்ஜான் பண்டிகையொட்டி, இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி கடந்த மார்ச் 7ஆம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், தவெக தலைவரும், நடிகருமான விஜய் கலந்து இஸ்லாமியர்களோடு நோன்பு கஞ்சி அருந்தியதோடு தொழுகையிலும் ஈடுபட்டார்.
இந்த சூழ்நிலையில், தவெக தலைவர் விஜய்யிடம் இஸ்லாமியர்கள் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் சகாபுதீன் ரஸ்வி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது, ‘தமிழ்நாட்டிலிருந்து விஜய் என்ற ஒரு முக்கிய நபர் இருக்கிறார் அவர் தவெக என்ற கட்சியை உருவாக்கியுள்ளார். இப்போது, அவர் திரைப்படத் துறையிலிருந்து அரசியலுக்கு மாற விரும்புகிறார். திரைப்படத் துறையில் இருந்த காலத்தில், அவர் தனது பல படங்களில் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரித்தார். பல்வேறு வழிகளில் முஸ்லிம்களை அவதூறு செய்ய முயன்றார். இப்போது, அவர் ஒரு அரசியல் முகத்தை முன்வைத்து முஸ்லிம் சமூகத்திற்குள் நுழைய முயற்சிக்கிறார்
சமீபத்தில் அவர் ஒரு இஃப்தார் விருந்தை நடத்தி, சூதாட்டக்காரர்கள், மது அருந்துபவர்கள் மற்றும் பிற சமூக விரோத சக்திகளை அழைத்தார், இது தமிழ்நாட்டில் உள்ள முஸ்லிம் சமூகத்தை எரிச்சலடையச் செய்துள்ளது. தமிழ்நாட்டு முஸ்லிம்கள் நடிகர் விஜய்யுடன் கைகுலுக்கவோ, சந்திக்கவோ அல்லது அனுதாபம் கொள்ளவோ கூடாது என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் தங்கள் முடிவுகளை புத்திசாலித்தனமாக எடுக்க வேண்டும், நடிகர் விஜயை நம்ப முடியாது என்பதை அறிந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்தார். இது தமிழக அரசியலில் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது.

இந்த நிலையில், விஜய் இஃப்தார் நோன்பில் பங்கேற்றதில் உள்நோக்கம் இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவரிடம், விஜய்க்கு அகில இந்திய முஸ்லிம் ஜமாத் தலைவர் கண்டனம் தெரிவித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதலளித்த சீமான், “எனக்கு தம்பி விஜய்யை பற்றி தெரியும். அது மாதிரி உள்நோக்கம் வைத்துகொண்டு செய்யும் ஆள் அவர் கிடையாது. அவர் எதார்த்தமான ஆள். இஃப்தார் நிகழ்ச்சிக்கு அழைத்திருப்பார்கள், அதனால் அவர் போயிருப்பார். விஜய்யை பற்றி உங்களுக்கு தெரியாதா? எனக்கே தனிப்பட்ட முறையில் தம்பியை தெரியும். கவனத்தை தன் பக்கம் இழுப்பதற்காக எங்கிருந்தோ பேசுகிறார்கள். இந்த மாதிரி குற்றச்சாட்டை எல்லாம் தம்பி விஜய் மீது வைக்காதீர்கள்” என்று கூறினார்.