
கடந்த 2020ஆம் ஆண்டில் இருந்து நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வந்தது. இருப்பினும், இந்த திட்டத்தை மத்திய அரசு நாடு முழுவதும் அமல்படுத்தியது. ஆனால், இந்த திட்டத்துக்கு தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால், இங்கு புதிய கல்விக் கொள்கையை திட்டத்தை அமல்படுத்த முடியவில்லை.
புதிய கல்விக் கொள்கையில் முக்கிய அம்சமான மும்மொழி கொள்கை, தமிழ்நாட்டிற்கு ஏற்புடையதல்ல என்று கூறி தமிழக அரசியல் தலைவர்கள் அந்த திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். மேலும், மத்திய பா.ஜ.க அரசு மும்மொழி கல்விக் கொள்கை என்று கூறி மறைமுகமாக இந்தியை தமிழ்நாட்டிற்குள் திணிக்க முயற்சி செய்கிறது என்று தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு குரல் வந்து கொண்டே இருக்கிறது. அதே சமயம் தாய்மொழி, ஆங்கிலம் மற்றும் ஏதேனும் மூன்றாவது மொழியை கற்றுக்கொண்டால் மாணவர்களின் அறிவு வளர்ச்சிக் கூடும் என்று பா.ஜ.கவினர் கூறி புதிய கல்விக் கொள்கை திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், தமிழ்நாட்டில் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் தான். கல்வி தொடர்பான நிதியை தமிழகத்திற்கு ஒதுக்கப்படும் என்று ஒன்றிய பா.ஜ.க அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. இதனால், தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கும் இடையே மொழி தொடர்பான மோதல் போக்கு உருவாகி வருகிறது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளாக மாறி வருகிறது.

இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநில அரசு புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், 2025-2026 கல்வியாண்டில் மராத்தி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளுக்கு 1-5ஆம் வகுப்புகளில் மூன்றாவது மொழியாக இந்தி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே 1ஆம் வகுப்பு முதல் 4ஆம் வகுப்பு வரை ஆங்கிலம், மராத்தி மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளா நிலையில், தற்போது மூன்றாவது மொழியாக இந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. மராத்தி அதிகம் பேசும் மகாராஷ்டிராவில், இந்தி மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மகாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ.க - சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.