அமெரிக்காவைச் சேர்ந்த நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் ஆராய்ச்சி நிறுவனம் அதானி குழுமம் முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் கடந்த மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் அனைத்தும் கடந்த இரண்டு ஆண்டுகளாக அதானி நிறுவனங்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தும், அதானி குழுமத்தின் முன்னாள் உயரதிகாரிகள் சிலரை நேர்காணல் செய்தும் திரட்டியது என ஹிண்டன்பெர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், அந்த ஆய்வறிக்கையில் பங்கு முறைகேடு, பங்கின் மதிப்பினை உயர்த்திக் காட்டி அதிக கடன் பெறுதல், போலி நிறுவனங்கள் துவங்கி வரி ஏய்ப்பு செய்தது போன்ற குற்றச் செயல்களில் அதானி குழுமம் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் அதானி குழுமத்தின் பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்தது. மேலும் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்து 20வது இடத்திற்கு மேல் அதானி தள்ளப்பட்டார். இதனை இந்தியாவிற்கு எதிராக தொடுக்கப்பட்ட போர் என்று அதானி தெரிவித்திருந்தார். இருப்பினும் இந்தியா முழுவதும் அதானிக்கு எதிராகவும், இந்த விவகாரம் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
குறிப்பாக நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அதானி விவகாரத்தை கையில் எடுத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன. இதனால் அமளி ஏற்பட்டு நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது. இருப்பினும் எதிர்க்கட்சிகள் அதானிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஹிண்டன்பர்க் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள ட்வீட் புதிய பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஹிண்டன்பெர்க் நிறுவனம் மேலும் ஒரு முக்கிய விவகாரத்தை விரைவில் அம்பலப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இது தற்போது இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. ஆனால் ஹிண்டன்பர்க் நிறுவனம் எதை பற்றி என்று குறிப்பிடாததால், பலரும் அதானி குறித்த மேலும் சில ஊழல் பட்டியலை தான் அந்த நிறுவனம் வெளியிடப்போகிறது எனக் கூறி வருகின்றனர்.