நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நாளைவரை (13.08.2021) நடைபெறவிருந்த நிலையில், பெகாசஸ் விவகாரம், வேளாண் சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தைத் தொடர்ந்து முடக்கிவந்ததால், நாடாளுமன்றக் கூட்டத்தொடரை மத்திய அரசு நேற்றோடு முடிவுக்கு கொண்டுவந்தது.
இதனைக் கண்டித்து காங்கிரஸ் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் இன்று நாடாளுமன்றத்திற்கு வெளியே பேரணியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தும் பதாகைகளையும், பெகாசஸ் குறித்து விசாரணை நடத்தக் கோரும் பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
பேரணியைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, "நாடாளுமன்றதிற்குள் பேச அனுமதிக்கப்படாததால், உங்களிடம் (ஊடகங்களிடம்) பேசவந்துள்ளோம். நாடாளுமன்றதிற்குள் பேச அனுமதிக்கப்படாதது ஜனநாயகப் படுகொலை. மாநிலங்களவையில் எம்.பிக்கள் முதன்முறையாக தாக்கப்பட்டுள்ளனர்; தள்ளிவிடப்பட்டுள்ளனர். சபாநாயகர் தான் வருத்தப்படுவதாகக் கூறுகிறார். ஆனால், சபையை சுமுகமாக நடத்துவது அவரது பொறுப்புதானே? அதை ஏன் அவரால் செய்ய முடியவில்லை?" என கேள்வியெழுப்பினார்.
தொடர்ந்து அவர், "நாடளுமன்றக் கூட்டத்தொடர் முடிவடைந்துவிட்டது. ஆனால் நாட்டின் அறுபது சதவீதம் பேரைப் பொறுத்தவரை, நாடாளுமன்றம் நடைபெறவில்லை. நாட்டின் அறுபது சதவீத குரல்கள் நேற்று நசுக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டன" என தெரிவித்தார்.
பேரணியில் கலந்துகொண்ட சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், "நாடாளுமன்றத்தில் தங்களது கருத்துக்களை முன்வைக்க எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பெண் எம்.பிக்களுக்கு எதிரான நேற்றைய சம்பவம் ஜனநாயகத்திற்கு எதிரானது. பாகிஸ்தான் எல்லையில் நாங்கள் நிற்பது போன்று இருந்தது" என கூறினார்.
பொது காப்பீடு வர்த்தக தேசியமயமாக்கல் திருத்த மசோதாவை மத்திய அரசு மாநிலங்களவையில் நிறைவேற்றியபோது, சபாநாயகர் இருக்கைக்கு அருகே அமளியில் ஈடுபட்ட பெண் எம்.பிக்களை அவை பாதுகாவலர்கள் தாக்கியதாக புகார் எழுந்துள்ளதும், தன்னுடைய 55 வருட நாடாளுமன்ற வாழ்க்கையில் சக பெண் எம்.பிக்கள் தாக்கப்படுவதைப் பார்த்ததில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியதும் குறிப்பிடத்தக்கது.