
தெலுங்கானா மாநிலம் ஆதிலாபாத் மாவட்டத்தில் உள்ள தரம்புரி பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 30க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை ஆகிய மூன்று நாட்கள் விடுமுறை முடிந்து நேற்று முன் தினம் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் வழக்கம் போல் பள்ளிக்கு வந்துள்ளனர்.
இதனிடையே மதிய உணவு தயார் செய்வதற்கு பள்ளிக்கு வந்த சமையலர்கள் பாத்திரங்களைச் சுத்தம் செய்ய முடிவு செய்து தண்ணீர் குழாயைத் திறந்துள்ளனர். அப்போது, தண்ணீரில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதுகுறித்து உடனடியாக தகவல் தலைமை ஆசிரியருக்குத் தெரிவிக்கப்பட்டு, மாணவர்கள் யாரும் தண்ணீர் குடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டது.
அதன்பின்னர் தலைமையாரிசியர் பிரதீபா இச்சோடா காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் நிபுணர்களை அழைத்து வந்து ஆய்வு செய்ததில் பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் பூச்சு கொல்லி மருத்து கலந்திருப்பது தெரியவந்தது. மேலும் போலீசார் வளாகத்தைச் சோதனையிட்டபோது பூச்சிகொல்லி மருத்து டப்பாவும் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த பகுதியினர் சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.