Skip to main content

மின்னல் தாக்கி 8 குழந்தைகள் பலி- விளையாடி கொண்டிருந்த போது ஏற்பட்ட பரிதாபம்!

Published on 20/07/2019 | Edited on 20/07/2019

பீகார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மாநிலத்தில் உள்ள 16 மாவட்டங்கள் மிக மோசமான பாதிப்புக்குள்ளாகின. கனமழையால் அனைத்து ஆறுகளிலும் வெள்ள நீர் அபாயகட்டத்தை தாண்டி ஓடுகிறது. நூற்றுக்கணக்கான கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் அங்கு வசித்த பல ஆயிரக்கணக்கான மக்கள் தற்காலிக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். 

 

BIHAR Lightning struck 8 children killed

 


வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை தேசிய பேரிடர் மீட்பு படை, மாநில அரசின் மீட்புக்குழுவினர் மற்றும் ராணுவத்தினர் இணைந்து மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பீகார் மாநிலத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 92 ஆக உயர்ந்துள்ளது என மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 50 லட்சம் மக்கள் வீடுகளை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அம்மாநிலத்தின் நவாடா மாவட்டத்தின் எல்லைக்குட்பட்ட தன்பூர் முஷஹரி கிராமத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது அப்பகுதியில் உள்ள அரச மரத்தை சுற்றி 18 குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். 

 

BIHAR Lightning struck 8 children killed

 


அரச மரத்தை தீடிரென மின்னல் தாக்கியது. மரத்திற்கு அருகில் விளையாடி கொண்டிருந்த 8 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 10 குழந்தைகள் படுகாயமடைந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் படுகாயமடைந்த குழந்தைகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மின்னல் தாக்கி ஒரே கிராமத்தை சேர்ந்த 8 குழந்தைகள் உடல் கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் ஏற்கனவே புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில் மின்னல் தாக்கி குழந்தைகள் இறந்துள்ள சம்பவம், அம்மாநில மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்