
பிரபல பாலிவுட் பாடகர் அபிஜீத் பட்டாச்சார்யா, சமீபத்தில் ஏ.ஆர்.ரஹ்மானை இசையில் அதிக தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதாகவும் இதனால் நேரடி இசைக்கலைஞர்களுக்கு போதுமான வாய்ப்பு கிடைப்பதில்லை எனவும் விமர்சித்திருந்தார். மேலும் ஒரு கம்போசர் எப்படி லேப்டாப்பில் இசையமைக்க முடியும் எனவும் இனி எந்த இசைக்கலைஞர்களும் தேவையில்லை என நம்புகிறார் எனவும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் அபிஜீத் பட்டாச்சார்யா விமர்சனத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதிலளித்துள்ளார். பிரபல ஆங்கில ஊடகமான இந்தியா டுடே-வில் ஏ.ஆர்.ரஹ்மான் பேசியதாவது, “எல்லாத்துக்கும் என்னைக் குறை சொல்வது நன்றாகத்தான் இருக்கிறது. எனக்கு இப்போதும் அபிஜீத்தை ரொம்பப் பிடிக்கும், அவருக்கு கேக் கூட அனுப்புவேன். அதே சமயம் அவர் கூறியது அவருடைய கருத்து. அப்படி இருப்பதில் எந்த தவறும் இல்லை.

சாவா அல்லது பொன்னியின் செல்வன் போன்ற படங்களில் சுமார் 200 முதல் 300 இசைக்கலைஞர்கள் வேலை பார்த்தார்கள். சில பாடல்களில் 100க்கும் மேற்பட்டோர் பணியாற்றுகிறார்கள். அது குறித்து நான் பொது வெளியில் சொல்வதில்லை. அதனால் மக்களுக்கு அது பற்றித் தெரிவதில்லை. கணினிகளைப் பயன்படுத்தி டியூன்களை நன்றாகச் சரிசெய்ய முடியும். ஆனால் இசைக்கலைஞர்களை வைத்து ரெக்கார்ட் செய்ததை நிராகரிக்க முடியாது. எனவே ஆரம்பக் கட்ட வேலைகளுக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம், பின்னர் இறுதியில் நேரடியாகப் பதிவு செய்கிறோம்” என்றார்.