Skip to main content

நாங்குநேரி மாணவர் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல்; பின்னணி என்ன?

Published on 17/04/2025 | Edited on 17/04/2025

 

Student Chinnadurai beaten again

நெல்லை மாவட்டத்தின் நாங்குநேரியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முனியாண்டியின் மகன் சின்னத்துரை. கடந்த 2023 ஆம் ஆண்டு நாங்குநேரியில் உள்ள அரசு பள்ளியில் படித்தபோது சாதிய தொடர்பான பிரச்சனையில் சக மாணவர்கள் சிலரால் வீடு புகுந்து சரமாரியாக வெட்டப்பட்டு படுகாயமடைந்தார். இந்த தாக்குதலை தடுக்க வந்த சின்னதுரை தங்கைக்கும் வெட்டு விழுந்தது. அதன்பின்னர் சின்னதுரை மற்றும் அவரது தங்கை இருவரும் சிகிச்சைக்கு பிறகு குணமடைந்தனர். பாதுகாப்பு கருதி அரசு சார்பில் சின்னத்துரைக்கு ரெட்டியார்பட்டியில் வீடு வழங்கப்பட்டது. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Student Chinnadurai beaten again

இதனைத் தொடர்ந்து சம்பவத்தில் இருந்து மீண்டு வந்து 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவன் சின்னதுரைக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகளும், வாழ்த்துகளும் குவிந்தன. இதையடுத்து, அரசு உதவி பெறும் கல்லூரியில் தற்போது 2 ஆம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார்.  இந்த சூழலில் தான்  ஆன்லைன் செயலிகளில் ஒன்றான கிரிண்டர் செயலியில்(grindr app) செயல்பட்டு வரும் அடையாளம் தெரியாத குழுவினருடன் மாணவர் சின்னத்துரைக்கு பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  அந்த குழுவினரின் நடவடிக்கையைப் பற்றி அறியாத சின்னத்துரையை நேற்று(16.4.2025) இரவு அந்த மர்மக் குழு தொடர்பு கொண்டு மாவட்ட அறிவியல் மையம் அருகிலுள்ள வசந்த நகருக்கு வரவழைத்துள்ளனர். அத்துடன் சின்னத்துரைக்கு வேண்டப்பட்ட ஒரு மாணவனும் அவரை வரச் சொன்னதாகவும் சொல்லப்படுகிறது.

வசந்த நகருக்கு சின்னத்துரை வந்ததும் அங்கு பதுங்கியிருந்த மர்ம நபர்கள் அவரைத் தாக்கியிருக்கிறனர். தாக்குதலில் மாணவன் சின்னத்துரைக்கு ஏற்கனவே காயம் ஏற்பட்ட கையில் மீண்டும் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அவர் கிசிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்.

Student Chinnadurai beaten again

சின்னத்துரையிடம் விசாரணை நடத்திய துணை ஆணையர் வினோத் சாந்தாராம் தலைமையிலான போலீசார்அவரைத் தாக்கிய 5 பேர் கொண்ட மர்ம கும்பலை தேடுவதுடன் சம்பவத்தின் பின்னணி என்ன என்பதனையும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

ஏற்கனவே மாணவன் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தமிழகத்தையே அதிரச் செய்த நிலையில் தற்போது அவர் மீது மீண்டும் தாக்குதல் நடந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சார்ந்த செய்திகள்