
நான் கருவில் இருக்கும்போதே என் எதிரியை தீர்மானித்து விட்டேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், விசிக தலைவர் திருமாவளவன் இந்தியத் தேசத்தை ஏற்றுக்கொண்டு தமிழ் தேசியத்தை பற்றி பேசுவது முட்டாள்தனமான அரசியல் என்று விமர்சித்துள்ளாரே என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த சீமான், “அது எங்கள் அண்ணன் திருமாவளனின் கருத்து; அந்த கருத்தை நான் மதிக்கிறேன். ஆனால் ஏற்கவில்லை. நான் பேசும் அரசியல், செய்து கொண்டிருக்கும் அரசியல் அனைத்தும் 2004 - 2007 காலகட்டங்களில் இதையெல்லாம் எனக்கு கற்பித்த பேராசான் யார் தெரியுமா? எங்கள் அண்ணன்(திருமாவளவன்) தான். அவர் மேடையில் நின்று பேசிக்கொண்டிருந்தபோது அவர் எதிரே கைக்கட்டி அமர்ந்துகொண்டு கேட்டவன் தான் நான். நான் கருவில் இருக்கும்போதே என் எதிரியை தீர்மானித்து விட்டேன். இவனைத் தான் நான் ஒழிக்க வேண்டும் என்று கருவில் இருக்கும் போதே குறித்துவிட்டேன். அதனால், சரி அது அவரின் கருத்து என்று அப்படியே கடந்து செல்ல வேண்டும்” என்று பதிலளித்தார்.