2021- 2022 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். முதல்முறையாக காகிதமற்ற டிஜிட்டல் பட்ஜெட்டை 'டேப்லட்' (Tablet PC) மூலம் தாக்கல் செய்யப்படுகிறது.
பட்ஜெட் தாக்கல் செய்து வரும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவில் மேலும் இரண்டு கரோனா தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் இன்று (01.02.2021), “இந்தியாவில் 2 தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. இந்தியா கரோனாவிற்கு எதிராக தனது சொந்த குடிமக்களை மட்டுமல்லாமல் 100 அல்லது அதற்கு மேற்பட்ட நாடுகளையும் பாதுகாக்கத் தொடங்கியுள்ளது. மேலும் 2 தடுப்பூசிகள் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றன என்பது ஆறுதலளிக்கிறது” எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர், 2021 - 2022 பட்ஜெட்டில் கரோனா தடுப்பூசிகளுக்கு 35 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தேவைப்பட்டால் கூடுதல் தொகை ஒதுக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.