தெலங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் தேதியை நவ.9 என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்பிருந்தே இந்த ஐந்து மாநிலங்களிலுமே அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தங்கள் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வந்தனர். சில இடங்களில் தேர்தல் தேதி அறிவிப்புக்கும் முன்பே தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் சந்திரசேகர ராவ்வின் பாரத் ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் சார்பில் துபாக்கா தொகுதியில் எம்.பி. கோத்தா பிரபாகர் ரெட்டி போட்டியிடவுள்ளார். அதனால், இன்று (30-10-23) அவர் தெலங்கானாவில் தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்திருந்தார். அப்போது அவர், சித்திபெட் மாவட்டத்தில் தவுலதாபாத் பகுதியில் சுரம்பள்ளி கிராமத்தில் பிரச்சாரம் செய்து வந்தார்.
அப்போது அவரை நோக்கி ஒரு மர்ம நபர அவரிடம் கை குலுக்குவது போல் அருகில் வந்தார். அதன் பிறகு, திடீரென்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரபாகர் ரெட்டியின் வயிற்றில் குத்தினார். இதில் அவரது வயிற்று பகுதியில் காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் அந்த மர்ம நபரை மடக்கி பிடித்து சரமாரியாக தாக்கினர்.
இதையடுத்து, பிரபாகர் ரெட்டியை அவருடைய காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், கத்தியால் குத்திய மர்ம நபரை பிடித்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.