கடந்த 1981 ஆம் ஆண்டு முதல் உத்தரபிரதேச முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு மாநில அரசின் கருவூலத்திலிருந்தே வருமான வரி செலுத்தப்பட்டு வந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த 1981 ஆம் ஆண்டு உத்தரபிரதேச முதல்வராக வி.பி.சிங் இருந்த போது இயற்றப்பட்ட சட்டத்தின்படி, அம்மாநிலத்தில் ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் கட்சியில் உள்ள முதல்வர், அமைச்சர்கள் ஆகியோருக்கு மாநில அரசு கஜானாவில் இருந்து வருமான வரி செலுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஊடகம் ஒன்றில் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அம்மாநில அரசியல்வாதிகளிடம் இதுகுறித்து கேள்வியெழுப்பப்பட்ட போது அவர்கள் பதிலளிக்க மறுத்துள்ளனர்.
இதுகுறித்து ஊடகம் ஒன்றிடம் பேசிய ஒரு அரசியல்வாதி, 1980 காலகட்டத்தில் அமைச்சர்கள் பெரும்பாலும் ஏழைகளாக இருந்தது மற்றும் ஊதியமும் குறைவு போன்ற காரணங்களால் மாநில அரசே வரியை செலுத்தும் வகையில் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் அது இன்று வரை தொடர்ந்து வருகிறது என கூறியுள்ளார். இந்தச் சட்டம் இயற்றப்பட்ட பின் கடந்த 38 ஆண்டுகளாக உ.பி. மாநிலத்துக்கு இதுவரை 19 முதல்வர்கள் வந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மாநில அரசுதான் வருமான வரியைச் செலுத்தி வந்திருக்கிறது.
மேலும் கடந்த இரண்டு நிதியாண்டுகளாக முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அவரின் அமைச்சர்களுக்கும் வருமான வரியாக ரூ.86 லட்சம் அரசு கரூவூலத்திலிருந்து செலுத்தப்பட்டுள்ளது என கூரப்பப்டுகிறது. உ.பி. முதல்வர்களுக்கும், அமைச்சர்களுக்கும் அரசுதான் வருமான வரி செலுத்தி வருகிறது என்பதை அந்த மாநிலத்தின் நிதித்துறை முதன்மைச் செயலாளரான சஞ்சீவ் மிட்டல் உறுதி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.